2016-03-02 15:06:00

அமைதி ஆர்வலர்கள் : 2008ல் நொபெல் அமைதி விருது


மார்ச்,02,2016. “எல்லாச் சண்டைகளுக்கும் தீர்வு காணப்பட முடியும். போர்களும், மோதல்களும் தவிர்க்க இயலாதவை அல்ல. அவைகளுக்கு மனிதரே காரணம். போரை ஊக்குவிப்பதற்கு எப்போதுமே ஆர்வம் உள்ளதைக் காண முடிகிறது. ஆதலால், அதிகாரமும், செல்வாக்கும் உள்ளவர்களால் போரை நிறுத்த முடியும். அமைதி என்பது, நன்மனத்தைச் சார்ந்தது”. இக்கூற்றுக்கு உரிமையாளரான Martti Ahtisaari அவர்களுக்கே 2008ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. ஃபின்லாந்து நாட்டின் முன்னாள் அரசுத்தலைவராகிய Martti Ahtisaari அவர்கள், பன்னாட்டு அளவில் அமைதி ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இடைநிலை வகிப்பதிலும், போருக்குப் பின்னர் நாடுகளைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதிலும் வல்லுனர். நமீபியா நாட்டின் மற்றும் நியுயார்க் நகரின் கவுரவக் குடிமகனான இவர், இரண்டாயிரமாம் ஆண்டில், CMI என்ற Crisis Management Initiative அமைப்பை உருவாக்கினார். இந்த அரசு-சாரா அமைப்பு, போர்களை முடிவுக்குக் கொண்டுவந்து, நிலையான அமைதியை உருவாக்க முயற்சித்து வருகிறது. ஹெல்சின்க்கி மற்றும் Brussels நகரங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ள இந்த CMI அமைப்பு, லைபீரியா, எத்தியோப்பியா, கருங்கடல் பகுதி, மத்திய கிழக்கு மற்றும் இந்தோனேசியாவின் Aceh பகுதிகளில் பணியாற்றி வருகின்றது. 2005ம் ஆண்டில், இந்தோனேசிய அரசுக்கும், Aceh விடுதலை இயக்கத்திற்கும் இடையே அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தியதில் இந்த அமைப்பு பலரின் பாராட்டைப் பெற்றது. 2014ம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகள் பற்றிய புலனாய்வு (OHCHR) குழுவுக்கு ஆலோசகர், தேர்தல்கள், சனநாயகம் மற்றும் பாதுகாப்பு குறித்த உலக அவையின் உறுப்பினர், ஐரோப்பிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கைகளை ஆய்வு செய்து ஊக்குவிக்கும் அவையில் உதவித் தலைவர் உட்பட, பல்வேறு அரசு-சாரா அமைப்புகளில் பணியாற்றி வருகிறார் Martti Ahtisaari. இவர், 1994ம் ஆண்டு முதல் 2000மாம் ஆண்டுவரை, ஃபின்லாந்து நாட்டின் அரசுத்தலைவராகப்  பணியாற்றினார்.

Martti Ahtisaari அவர்கள், 1937ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி, ஃபின்லாந்து நாட்டின் ஒரு பகுதியாக இருந்த Viipuri நகரில் பிறந்தார். முன்னாள் சோவியத் யூனியன் ஃபின்லாந்தைத் தாக்கியபோது, Viipuri சோவியத்தின் ஒரு பகுதியானது. இதனால் அப்பகுதியிலிருந்து வெளியேறிய நான்கு இலட்சம் பேரில் இவரும் ஒருவரானார். Ahtisaari அவர்கள், தனது தாயோடு ஒவ்வோர் இடமாகச் சென்று, கடைசியில், ஃபின்லாந்தின் கிழக்குப் பகுதியிலுள்ள Kuopio நகரில் குடியேறினார். இந்த அனுபவமே, உலகில், தன்னைப் போன்று துன்பம் அனுபவிக்கும், இலட்சக்கணக்கான புலம்பெயரும் மக்களுக்கு உதவ வேண்டும் மற்றும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களுக்கு இவரில் வித்திட்டன. கடந்த 45 ஆண்டுகளாக, மனித முன்னேற்றம், அமைதியை ஏற்படுத்தல் போன்ற விவகாரங்களுக்கே உழைத்து வருகிறார் Martti Ahtisaari. இவர், ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சகத்திலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்திலும் பணியாளராகச் சேர்ந்தபோதும், முதலும் முக்கியமுமான பணியாக இதனைச் செய்தார். 1965ம் ஆண்டில் ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்த இவர், அவ்வமைச்சகத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் துறையின் உதவி இயக்குனர், பன்னாட்டு வளர்ச்சி ஒத்துழைப்புத் துறையின் உதவி இயக்குனர், ஃபின்லாந்து அரசின், வளரும் நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை குழுவின் உறுப்பினர் என, பல பதவிகளை வகித்துள்ளார்.

Ahtisaari அவர்கள், தனது 36வது வயதில், டான்சியா நாட்டுக்கும் (1973–1976), ஜாம்பியா, சொமாலியா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கும் (1975–1976), ஃபின்லாந்து நாட்டின் அரசியல் தூதராக நியமிக்கப்பட்டார். இந்த அனுபவம் இவரை நமீபியா விவகாரத்தில் தலையிட உதவியது. இவர், முதலில், நமீபியாவுக்கான ஐ.நா. நிறுவன செனட் குழுவில் உறுப்பினராக (1975-1976) பணியாற்றினார். பின்னர், நமீபியாவுக்கான ஐ.நா. கமிஷனராக (1977-1981) நியமிக்கப்பட்டார். பின்னர் நியுயார்க் சென்று, நமீபியாவுக்கான ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்பு பிரதிநிதியாக 1978ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இருந்துகொண்டே, ஃபின்லாந்துக்குத் திரும்பி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தில் பன்னாட்டு வளர்ச்சி ஒத்துழைப்புத் துறையில் நேரடிப் பொதுச் செயலராகப் பணியைத் தொடங்கினார். அதோடு, நமீபியாவில் ஆட்சி மாற்றத்திற்கு உதவும் ஐ.நாப் பணிக்குழுவுக்கு (UNTAG) Ahtisaari அவர்கள், ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றினார். இவர் நமீபியாவில் அமைதி ஏற்பட எடுத்துக்கொண்ட முயற்சிகள், நமீபியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டன.

1991ம் ஆண்டு ஜூலை முதல் தேதி, ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தில் அரசுச் செயலரானார் Ahtisaari. பால்கன் பகுதி பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலும்(1992-1993) ஈடுபட்டார். கோசோவோவின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தையின் வழியாகத் தீர்வு காண்பதற்கு, 16 மாதங்கள் கடுமையாக முயற்சித்த பின்னர், Ahtisaari மற்றும் அவரின் தலைமையிலான ஐ.நா. குழு (UNOSEK), ஐ.நா.பொதுச் செயலருக்குத் தீர்வை பரிந்துரைத்தது. இது Ahtisaari திட்டம் என அழைக்கப்படுகிறது. ஐ.நா.விலும், ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சகத்திலும் பல முக்கிய பதவிகளை வகித்த Martti Ahtisaari அவர்கள், 1994ம் ஆண்டு பிப்ரவரியில் ஃபின்லாந்து அரசுத்த்லைவராகத் தேர்ந்தெடுக்கப்ப்ட்டார்.  2000மாம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி வரை இப்பதவியில் இவர் இருந்தார். இக்காலத்தில்தான் ஃபின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. கடும் பொருளாதாரப் பின்னடைவையும் மேற்கொண்டது. ஈராக்கில் ஐ.நா. பணியாளர் பாதுகாப்பு குறித்த தனிப்பட்ட குழுவுக்கும் இவர் 2003ல் தலைமை வகித்தார். 

தற்போது எண்ணற்ற அரசு-சாரா நிறுவனங்களில் உறுப்பினராகப் பணியாற்றிவரும் Ahtisaari அவர்கள், அனைத்துச் சண்டைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார். ImagineNations குழு வழியாக இளையோர் வேலைவாய்ப்பையும் ஊக்குவித்து வருகிறார். 2007ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட The Elders என்ற அமைப்பிலும் 2009ம் ஆண்டில் சேர்ந்தார்  Martti Ahtisaari. இவ்வமைப்பில் மூத்த அரசியல் தலைவர்கள், அமைதி ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். காலநிலை மாற்றம், எய்ட்ஸ், ஏழ்மை, இன்னும் போர்கள் இவற்றிற்குத் தீர்வு காண்பதற்கு இந்த அமைப்பு உழைத்து வருகிறது. 1959ம் ஆண்டில் ஃபின்லாந்து நாட்டின் Oulu பல்கலைக்கழகத்தில் பட்டயம் பெற்றுள்ள இவர், உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து 19 கவுரவ முனைவர் பட்டங்களையும் பெற்றிருக்கிறார். Ahtisaari தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.