2016-03-01 15:41:00

நன்றியுணர்வு, செயலில் காட்டப்பட வேண்டும், மெக்சிகோ ஆயர்கள்


மார்ச்,01,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்துள்ள மெக்சிகோ ஆயர்கள், நம் நன்றியுணர்வு, செயலில் காட்டப்பட வேண்டுமென்பதை விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மெக்சிகோ ஆயர்கள், இப்பயண நாள்களில் திருத்தந்தை கூறியவைகளைச் சிந்தித்துப் பார்க்குமாறு, விசுவாசிகள் மற்றும் நன்மனம் கொண்ட எல்லாருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மெக்சிகோ ஆயர்கள் பெயரில், இச்செவ்வாயன்று அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள் பேரவைத் தலைவர் Guadalajara பேராயர் கர்தினால் ஹோசே பிரான்சிஸ்கோ ரோப்லெஸ் ஒர்த்தேகா அவர்கள், இரக்கம் மற்றும் அமைதியின் தூதுவராக, திருத்தந்தை மெக்சிகோ பயணத்தை நிறைவு செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவில் திருத்தந்தை மக்களுக்காகச் செய்த செபம், அவரின் வார்த்தைகள், அடையாளச் செயல்கள், சான்று வாழ்வு, மெக்சிகோ பெரிய நாடு என்று வெளிப்படுத்தியது என எல்லாவற்றுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் கர்தினால் ஒர்த்தேகா. 

மெக்சிகோ தலத்திருஅவை, அரசுத்தலைவருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ள கர்தினால் ஒர்த்தேகா அவர்கள், அனைவரையும் குவாதலூப்பே அன்னைமரியிடம் அர்ரபணித்துச் செபித்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.