2016-03-01 14:50:00

திருத்தந்தை - இறை இரக்கம் மன்னிக்கிறது மற்றும் மறக்கிறது


மார்ச்,01,2016. கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கும், பிறரின் தவறுகளை மறந்து, பிறரை மன்னிப்பதற்கும் நம் இதயங்களைத் தயாரிப்பதற்கு ஏற்ற காலம் தவக்காலம் என்று, இச்செவ்வாய் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியின் வாசகங்களை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, மன்னிப்பதற்கான கடவுளின் எல்லையற்ற வல்லமை, அவரின் இயல்பின் முழுமையாக உள்ளது, அதேநேரம் மனித இயல்பு, தவறுகளுக்குச் சிறிதளவு மன்னிப்பு அளிக்கக்கூட திறனற்றதாக உள்ளது என்று கூறினார்.

தனக்கு எதிராகப் பாவம் செய்யும் சகோதரரை எத்தனை முறை மன்னிப்பது? ஏழுமுறை மட்டுமா? என்று திருத்தூதர் பேதுரு, இயேசுவிடம் கேட்டபோது, ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என்ற இயேசுவின் பதிலிலிருந்து மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை, கடவுள் மன்னிக்கும்போது, அவர் அதை மறந்துவிடுகிறார் என்பதுபோன்று, அவரின் மன்னிப்பு அவ்வளவு மகத்தானதாக உள்ளது என்று கூறினார்.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல், எங்கள் குற்றங்களை மன்னியும் என்று இறைத்தந்தையை நோக்கிச் செபிக்கிறோம், இது, உன்னால் பிறரை மன்னிக்க இயலாதபோது, கடவுள் எப்படி உன்னை மன்னிப்பார் என்ற சமவாக்கியமாக உள்ளது என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் நம்மை மன்னிக்க விரும்புகிறார், ஆனால், நாம் மூடிய இதயங்களைக் கொண்டிருந்தால், அங்கே இரக்கத்தால் நுழைய முடியாது, கடவுளும் மன்னிக்க மாட்டார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இரக்கம், பரிவன்பு, மன்னிப்பு ஆகியவை கடவுள் பண்புகள், முழு இதயத்தோடு மன்னிப்புக் கொடுப்பதும், மன்னிப்புப் பெறுவதும் இறை இரக்கச் செயல் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கு, நம் இதயங்களைத் தயாரிப்பதாக தவக்காலம் அமையட்டும் என்றும் கூறினார்.

மன்னிப்போம், மன்னிக்கப்படுவோம், பிறர்மீது இரக்கம் காட்டுவோம், அப்போது நாம் கடவுளின் இரக்கத்தை உணர்வோம், கடவுள் மன்னிக்கும்போது மறக்கவும் செய்பவர் என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.