2016-03-01 14:39:00

இது இரக்கத்தின் காலம் : வதை முகாமின் வானதூதர்


1941ம் ஆண்டு, ஏப்ரல் 21ம் தேதி, எங்கல்மார் உன்செய்திக் (Engelmar Unzeitig) என்ற இளம் அருள்பணியாளரை நாத்சி படையினர் கைது செய்தனர். அவர் செய்த குற்றம் என்ன? ஹிட்லரின் சர்வாதிகார அரசையும், யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதையும் எதிர்த்து, அருள்பணி எங்கல்மார் அவர்கள் கடுமையாகப் பேசிவந்தார். அதுவும், ஆலயங்களில், வழிபாட்டு நேரங்களில், இவ்வாறு பேசிவந்தார். எனவே, அவர் கைது செய்யப்பட்டு, தாக்ஹாவ் (Dachau) வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டார். அந்த வதைமுகாமில் 2,700க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். எனவே, அந்த வதைமுகாமை, "உலகிலேயே மிகப்பெரிய துறவு மடம்" என்று கேலியாக அழைத்தனர்.

அருள்பணி எங்கல்மார் அவர்கள், அந்த வதைமுகாமில் அடைக்கப்பட்டபோது, அவருக்கு வயது 30. இளையவர் எங்கல்மார் அவர்கள், தன் 18வது வயதில் Marianhill மறைப்பணியாளர்கள் சபையில் சேர்ந்தார். "வேறு யாரும் போக முடியவில்லையெனில், நான் போவேன்" என்ற விருதுவாக்கைக் கொண்ட இத்துறவுச்சபையில், 28வது வயதில் அருள்பணியாளராக திருநிலைப் படுத்தப்பட்ட எங்கல்மார் அவர்கள், ஈராண்டு பணிக்குப் பின் வதைமுகாமில் அடைக்கப்பட்டார்.

அருள்பணியாளருக்கென ஒதுக்கப்பட்டிருந்த தாக்ஹாவ் வதைமுகாமில், பல நாட்கள், அவர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். ஒருமுறை, புனித வெள்ளியன்று, இயேசு அனுபவித்த கொடுமைகளை அனைவருக்கும் நினைவுறுத்தும் வகையில், பல அருள் பணியாளர்கள், மற்றவர்கள் முன்னிலையில், சித்ரவதைகள் செய்யப்பட்டனர்.

வதைமுகாமில் 'டைபாய்ட்' நோய் பரவியது. அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய, அருள்பணி எங்கல்மார் அவர்கள், தன்னையே அர்ப்பணித்தார். நோயுற்று இறந்தோரை, நல்லடக்கம் செய்தார். விரைவில், அவரும் அந்நோயினால் தாக்கப்பட்டு, 1945ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி இறையடி சேர்ந்தார். அருள்பணி எங்கல்மார் அவர்களை ‘தாக்ஹாவ் வதை முகாமின் வானதூதர்’ என்று அழைத்தனர்.

2009ம் ஆண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அருள்பணி எங்கல்மார் அவர்களை ‘வணக்கத்திற்குரியவர்’ என்று அறிவித்தார். அருள்பணி எங்கல்மார் அவர்கள், தன் மத நம்பிக்கைக்காக சாட்சிய மரணம் அடைந்தார் என்பதை, இவ்வாண்டு சனவரி மாதம், ஒரு வரலாற்றுப்பதிவாக ஏற்றுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, அவர் ஒரு மறைசாட்சியாக, ‘அருளாளர்’ மற்றும் ‘புனிதர்’ பட்டங்களைப் பெற தகுதிபெற்றவர் ஆகிறார்.

ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் பணியாற்றிய அருள்பணி எங்கல்மார் உன்செய்திக் அவர்கள், மத நம்பிக்கைக்கு மட்டுமல்லாமல், இரக்கத்திற்கும் ஒரு சாட்சியாக வாழ்ந்து மறைந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.