2016-03-01 15:26:00

அமைதியைக் காப்பதன் வழியாக அகதிகள் நெருக்கடிக்குத் தீர்வு


மார்ச்,01,2016. புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்பவர்களை, அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் ஆப்ரிக்க நாடுகள், தங்கள் நாடுகளிலிருந்து குடிமக்கள் வெளியேறுவதைக் குறைக்கும் வழியாக, தங்கள் நாடுகளில் அமைதியையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்குமாறு ஆப்ரிக்க ஆயர் ஒருவர் வலியுறுத்தினார்.

கென்ய கத்தோலிக்க ஆயர் பேரவையின், புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோர் ஆணையம், கடந்த வாரம் நைரோபியில் நடத்திய கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய, அந்த ஆணையத்தின் உதவித் தலைவர் ஆயர் Virgilio Pante அவர்கள் இவ்வாறு கூறினார்.

துன்பங்களை எதிர்கொள்ளும் ஆப்ரிக்க நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதன் வழியாக, இளைய தலைமுறைகளை நாட்டிலே தக்க வைக்க முடியும் என்றும், நாடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு உதவ முடியும் என்றும் ஆயர் Pante அவர்கள் கூறினார்.

இனங்களுக்கு இடையே இடம்பெறும் வன்முறையால், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக்கொடுக்குமாறு ஆப்ரிக்க அரசுகளை விண்ணிப்பித்தார் ஆயர் Pante. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.