2016-02-29 15:56:00

வாரம் ஓர் அலசல் – நாமும் வல்லவராகலாம்


பிப்.29,2016. அது 1903ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி. அமெரிக்க ஐக்கிய நாட்டின், வட கரோலினா கடற்கரை. ஓர்வில் ரைட், வில்பர் ரைட் (Orville and Wilbur Wright ) என்ற இரு சகோதரர்கள். ரைட் சகோதர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், மனித இனத்தின் பறக்கும் முயற்சியில், முதல் வெற்றி பெற்று, வரலாற்றில் அழியாத இடம் பிடித்தவர்கள். அந்த நாளில் இவர்களுடைய விமானம் பறந்த உயரம் 20 அடி. பறந்த தூரம் 120 அடி. விமானம் விண்ணில் இருந்த நேரம் 12 வினாடிகள். பின்னர் அதே நாளில் வில்பர் ரைட் அவர்கள், மூன்று விமானங்களை, 59 வினாடிகளில் 852 அடி உயரத்திற்குப் பறக்கவிட்டு சாதனை படைத்தார். அட! இதென்ன உயரம், இதென்ன தூரம், இதென்ன நேரம் என்று, இக்காலத்தில் வாழும் நம்மில் சிலருக்கு இது வியப்பில்லாமல் தெரியலாம். பலருக்கு வியப்பாகவும் இருக்கலாம். ஏனெனில் இன்றைக்கு, சாதாரணமாக, பயணியர் விமானங்கள் பறப்பது 30 ஆயிரம் அடி உயரத்தில். செல்லும் தூரங்களும் ஆயிரக்கணக்கான மைல்கள். நேரமோ நாள் கணக்கில். பயணியர் விமானங்கள் மட்டுமா பறக்கின்றன? அறிவியலாளர்கள் அனுப்பும் விண்கலங்கள் வான்வெளிக் கோள்களை அடைவதற்கு எத்தனையோ கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கின்றன. செவ்வாய்க் கோளுக்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், அதன் சுற்றுவட்டப்பாதையை அடைவதற்கு, பயணம் செய்த தூரம் அறுபத்து எட்டுக் கோடி கிலோ மீட்டர். ஆமாம். பத்து மாதங்கள் 68 கோடி கி.மீ. தூரம் பயணம் செய்து செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப்பாதையை அது அடைந்தது. கடந்த 112 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளியில், அறிவியலில் நம்ப முடியாத அளவுக்கு அசாத்திய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1903ம் ஆண்டில், ரைட் சகோதரர்களின் வெற்றிக்கும், இக்காலத்தில் அறிவியளாலர்களின் சாதனைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு பற்றி நாம் சிந்திக்கிறோம். ஆம். எந்த ஒரு சாதனைக்குமே தொடக்கங்கள் சிறிதாகத்தான் இருக்கின்றன. ஆனால், தொடர் முயற்சி, விடா மனஉறுதி, தொடர் பயணம் போன்றவை, எங்கெங்கோ மனிதரை இட்டுச் செல்லுகின்றன. இவை, விண்ணிற்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலும், சாதனையாளர் மனிதர் பலரை உருவாக்குகின்றன.

அன்பு நேயர்களே, மனித இனத்தின் பறக்கும் சாதனையைத் தொடங்கி வைத்த ரைட் சகோதரர்கள் வைத்திருந்தது சாதாரண சைக்கிள் கடை. Ohio மாநிலத்தின் Daytonல் தங்களது சைக்கிள் கடையில் 1896ம் ஆண்டில், இவர்கள் தங்களின் விமானம் குறித்த சோதனைகளைத் தொடங்கினர். ஓர்வில் ரைட் படித்தது மூன்று ஆண்டு உயர்நிலைப் பள்ளிப் படிப்பு.  வில்பர் ரைட் படித்தது நான்கு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு. அவ்வளவுதான். ஆனால் அவர்கள் சாதித்துக் காட்டியது உலக வரலாற்றில் என்றுமே அழியாதது. ரைட் சகோதரர்கள் உருவாக்கியது போன்ற பெரிய பெரிய சாதனைகள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையில் பல எதிர்ப்புக்கள் மத்தியில் போராடி வெற்றி கண்டிருக்கும் பலர், சமூகத்திற்கு ஒளியாக, வழிகாட்டிகளாகத் தெரிகின்றனர். இவர்கள், துன்பங்களைச் சவாலாக ஏற்று, வெற்றியே இலக்கு என்ற முனைப்போடு வாழ்பவர்கள்.

ஸ்வேதா என்ற பெண், தமிழகத்தின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி. நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் நவீனப் பெண்ணான ஸ்வேதா அவர்கள், கல்லூரி வளாக நேர்காணலில் கை நிறையச் சம்பளத்துடன் கிடைத்த வேலையை, தன் சமூக மக்களின் நலனுக்கு உழைப்பதற்காக உதறித் தள்ளியிருப்பவர். திருச்சி- தஞ்சாவூர் சாலையில் உள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஸ்வேதா அவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு தாண்டிவந்த தடைகள் எத்தனை எத்தனை!

ஸ்வேதா விகடன் இதழுக்கு இப்படி பேட்டிக் கொடுத்திருக்கிறார்....

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையன், `குறத்தி...குறத்தி’னு கிண்டல் பண்ணினான். அதை வீட்டில் சொல்லாமலே, பள்ளிக்குப் போகாமல் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டிலேயே இருந்தேன். விடயம் தெரிஞ்சு எனது அம்மா பள்ளிக்கு அழைத்துக்கொண்டுவந்து அருள்சகோதரிகளிடம் பேசி என்னை மறுபடியும் வகுப்பில் சேர்த்தார்கள். இருந்தாலும் அந்தச் சம்பவம் என் மனதுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியது. பள்ளி வாகனத்தில் மற்ற பிள்ளைகளிடம் பேசவே பயமாக இருக்கும். ஒருநாள் என்னை `டொம்பச்சி, டொம்பச்சி'னு ஒரு பையன் சொன்னான். அப்படினா என்னனுகூட எனக்குத் தெரியாது. அம்மாவிடம் கேட்டபோது, தஞ்சாவூர் பக்கம் எங்கள் சமூக மக்களை இப்படித்தான் கூப்பிடுவார்கள் என்று சொன்னார்கள். நான் படிப்பைப் பாதியில் நிறுத்திடக் கூடாதுங்கிறதுல மட்டும் அம்மா விடாப்பிடியாக இருந்தாங்க. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இருந்தே, எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க, ஊர்க்காரங்க நெருக்கடி குடுத்தாங்க. அம்மாவும் அப்பாவும் ஊர்ல எங்க சமூகத்துல நடக்கிற நிறைய இளம்வயது திருமணங்களை நிறுத்தி, பிள்ளைகளைப் படிக்க வைக்கச் சொல்லி, பல காலமாப் போராடிக்கிட்டு இருக்கிறவங்க. அதனால அதுக்குப் பழிவாங்கிறதுக்காக எனக்கு தாலிக்கட்டி விட்டுடுறேன்னு பல பேர் சுத்துனாங்க. இதுக்குப் பயந்து அம்மா, என்னை திருச்சி ஃபிலோமினாஸ் பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டுட்டாங்க. `ஊருக்குப் போனா, கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்க'னு நானும் பயந்து படிக்க ஆரம்பிச்சேன். கூடவே பள்ளி கலைநிகழ்ச்சிகளில் பரதநாட்டியமும் ஆடுவேன். எங்க அம்மாவுக்கு பரதநாட்டியம் தெரியும். அதனால எனக்கும் அதுல ஆர்வம். பாட்டும் நடனமும் எங்க சமூக மக்களின் ரத்தத்துலேயே கலந்திருக்கு. ஒரு கட்டத்துல கலை நிகழ்ச்சினா,  நான்தான் முதல் ஆளா நிற்பேன். கூடைப்பந்தும் நல்லா விளையாடுவேன். மாவட்ட அளவில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன். பள்ளிப் படிப்பை முடிச்சு, திருச்சி எம்.ஏ.எம்.பொறியியல் கல்லூரியிலே கணனி அறிவியல் படிக்க இடம் கிடைச்சது. முதல் நாள் கல்லூரி வாசலில் போய் இறங்கியதை என்னால் மறக்கவே முடியாது. அம்மா, அப்பா, தாத்தானு குடும்பத்தோடு காரில்தான் போய் இறங்கினோம். எங்க தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். தோளில் துப்பாக்கியைத்  தொங்கவிட்டுக்கொண்டு, தலையில் முண்டாசு கட்டிய தாத்தா என்னை ஆசீர்வாதம் பண்ணினார். எல்லாரும் வைத்த கண் வாங்காமல் வேடிக்கை பார்த்தார்கள்.

உள்ளே நுழைஞ்ச முதல் நாள்லயே நான் நரிக்குறவப் பெண்ங்கிற விடயம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரிஞ்சுடுச்சு. ஆனா அவங்களோட வித்தியாசமான பார்வை, ஒதுங்கிப்போறது, கிண்டல் பண்றது எதையும் நான் கண்டுக்கவே இல்லை. நம்ம நோக்கம் படிக்கிறது, அதை விட்டுறக் கூடாதுனு கவனமா படிச்சேன். ஆனால், இன்னைக்கு என்னைப் புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட்டா இருக்கிறதும் அதே நண்பர்கள்தான். நான் வேலைக்குப் போனா, என் வாழ்க்கை மட்டும்தான் நல்லா இருக்கும். ஆனா, எங்க சமூக மக்கள் இன்னமும் மோசமான நிலைமையில்தான் இருக்காங்க. என்னை ஒரு தூண்டுதலாக நினைச்சு மற்ற பிள்ளைகளும் படிப்பாங்க. எங்க பிள்ளைங்க, டொம்பன், காக்கா குருவி, ஊசிபாசினு கிண்டல் பண்ணுவாங்க'னு பயப்படுறாங்க. இது மாறணும், ஒவ்வொருத்தரும் எங்களை சக மனுஷங்களா மதிக்கணும்.

இப்படி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ளார் ஸ்வேதா. மேலும், சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் துளசி ஹெலன் அவர்கள் அளித்துள்ள பேட்டியில், "எங்களைப் போன்றவர்களை ஏற்றிவிட வேண்டாம்... ஏணியைப் பறிக்காதீர்கள்!" என்று குமுறியிருக்கிறார். இவர், அனைத்துலக குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடிவரும் தமிழ்ப் பெண்.

இப்போ எனக்கு 29 வயசாகுது. 12 வயசில் குத்துச்சண்டை செய்ய ஆரம்பிச்சேன். என்னோட இந்த 16 வருட குத்துச்சண்டை பயணத்துல மாநில அளவில் 32 பதக்கங்கள் வாங்கியிருக்கேன். தேசிய அளவில் ரெண்டு முறை வெண்கலப் பதக்கமும், உலக அளவில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கேன். திறமை, வெற்றியெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். என்னோட தினசரி வாழ்க்கையைப் பற்றிச் சொல்லணும்னா, ‘‘என்னை நானே காப்பாத்திக்க வேண்டிய சூழல். என் ஏழ்மை காரணமாகவும், நான் கீழ்நிலையில் இருந்து மேல்நிலைக்கு வந்தவள் என்பதாலும் என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காம நான் நிராகரிக்கப்பட்ட இடங்கள் நிறைய. அது இன்னும் தொடருது. இன்னிக்கு எத்தனை நல்ல குத்துச்சண்டை வீரர்கள் ஆட்டோ ஓட்டறாங்க? காய்கறிக் கடையில வேலை செய்யுறாங்க தெரியுமா? நானும் எல்லா வேலைகளும் செய்திருக்கேன். கறிக்கடையிலகூட வேலை பார்த்திருக்கேன். பெரிய இடத்துப் பசங்களுக்கு மட்டும் ஆதரவு செய்யுறவங்க, தயவுசெஞ்சு எங்க திறமைமேல நம்பிக்கைவெச்சு, கீழ இருக்குறவங்களுக்கும் கைகொடுங்க. உலக அரங்குகளில் என் திறமையைத்தான் பார்ப்பாங்க, சாதியை இல்ல. ஆனா, இந்தியாவில் நான் வெற்றிபெற வேண்டிய சில போட்டிகளில் சாதியும், பணமும் விளையாடி, தோற்கவேண்டியவரை வெற்றியாளரா உலகத்துக்கு அறிமுகப்படுத்தினப்போ நான் அனுபவித்த வலியை, எந்த வார்த்தைகளில் சொல்லியும் புரியவைக்க முடியாது என்று மனம் வலிக்கச் சொல்லியிருக்கும் துளசி ஹெலன் அவர்கள், ஏழைங்களை கைதூக்கிவிடக்கூட வேண்டாம். ஆனா, நாங்களா முட்டிமோதி பிடிச்சு ஏறும் ஏணியையும் பறிச்சா, என்னதான் செய்வோம்? என்கிறார். 

இப்படி, முட்டி மோதி முன்னேறும், ஸ்வேதா, துளசி ஹெலன் போன்ற பல ஏழைகளின் ஏக்கங்கள் இவை. திறமைகளில் யாரும் குறைந்தவர்கள் இல்லை. இதற்கு சாதி, மதம், நிறம் பணம், தடையில்லை. வாய்ப்பிருந்தால், கிடைக்கும் வாய்ப்புக்களைச் சவாலோடு பயன்படுத்தினால் எல்லாருமே வல்லவராகலாம். இன்ப துன்பம் என்பது இரவு பகலைப் போன்றது. காலம் நாளை மாறலாம், காயமெல்லாம் ஆறலாம்.. சோகமென்ன தோழனே.. சூழ்ச்சி வெல்வாய் வீரனே எதிர்த்து நின்று போரிடு.. நீயும் வல்லவனே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.