2016-02-29 15:53:00

திருத்தந்தை - மறைசாட்சிகள், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வித்து


பிப்.29,2016. கிறிஸ்தவர்களுக்கு எதிராக, பெரும் அழிவுக்குரிய வன்முறைகள் பரவியுள்ள இக்காலத்தில், அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்குவிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகத் தலைவர்களை இத்திங்களன்று கேட்டுக்கொண்டார்.

எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் தேவாஹெதோ (Tewahedo) சபையின் முதுபெரும் தந்தை அருள்மிகு முதலாம் அபுனா மத்தியாஸ் (Abuna Matthias I) அவர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைப் பிரிப்பது எது என்பதைவிட, நம்மை இணைப்பது எது என்பதை சிந்திப்பதே மேலானது என்று கூறினார்.

கிறிஸ்தவர்கள், பல விதங்களில் பிரிந்திருந்தாலும், பகிர்ந்து கொள்ளப்படும் துன்பங்கள், ஒருவர் ஒருவருடன் நெருங்கி வருவதற்கு கிறிஸ்தவர்களுக்கு உதவி வருகின்றது என்றுரைத்த திருத்தந்தை, தொடக்ககாலத் திருஅவையில் இருந்தது போன்று, மறைசாட்சிகளின் இரத்தம், புதிய கிறிஸ்தவர்களின் வித்தாக மாறியுள்ளது என்றும் கூறினார்.

இக்காலத்தில், அனைத்துக் கிறிஸ்தவ சபைகளிலும் மறைசாட்சிகளாகச் சிந்தப்படும் பல கிறிஸ்தவர்களின் இரத்தம், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வித்தாக மாறியுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, மறைசாட்சிகளின் கிறிஸ்தவ ஒன்றிப்பு, கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய பாதையில், மேலும் முன்னேறிச் செல்வதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறினார்.

ஆப்ரிக்காவின் சில பகுதிகளிலும், மத்திய கிழக்கிலும் கிறிஸ்தவர்களுக்கும், பிற சிறுபான்மை சமூகங்களுக்கும் எதிராக இடம்பெற்றுவரும் கடும் வன்முறை பற்றி  எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் சபை அறிந்துள்ளது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரையொருவர் மதித்தல், மன்னித்தல், ஒப்புரவு மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில், அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்குவிக்குமாறு, உலகின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

பிப்ரவரி 26, கடந்த வெள்ளி முதல், பிப்ரவரி 29 இத்திங்கள் முடிய,  உரோம் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதுபெரும்தந்தை, அருள்மிகு முதலாம் மத்தியாஸ் அவர்கள், இத்திங்களன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, தனது பிரிதிநிதி குழுவுடன் சந்தித்தார்.

2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதுபெரும் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் மத்தியாஸ் அவர்கள், வத்திக்கானுக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் தேவாஹெதோ சபை, கீழை ஆர்த்தடாக்ஸ் சபைகளில் பெரியதாகும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.