2016-02-29 16:21:00

இயேசு, நம் மனமாற்றத்திற்காகக் காத்திருக்கின்றார்


பிப்.29,2016. நம்மோடு என்றென்றும் பொறுமை காக்கும் கடவுள், நம் மனந்திரும்புதலுக்காக கடைசி நேரம்வரைக் காத்திருக்கின்றார், ஆயினும், நம் மனம் மாற்றம் உடனடியாக, இன்றே தொடங்க வேண்டும் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடிநின்ற முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, கடவுள் துன்பங்களால் பாவத்தைத் தண்டிக்கிறார் என்ற எண்ணத்தை இயேசு திருத்தும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்திலிருந்து சிந்தனைகளை வழங்கினார்.

கடவுள் பற்றிய மற்றும் நம்மைப் பற்றி நாமே கொண்டிருக்கும் எண்ணத்தையும் பரிசோதித்துப் பார்க்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, நாம் ஏற்கனவே தூயவராக உள்ளோம் என்று நினைக்கும் சோதனையைத் தவிர்த்து, பாவத்தை உறுதியாக விலக்கி, மனம் மாற வேண்டுமென இயேசு அழைக்கிறார் என்று கூறினார்.

சில துன்ப நிகழ்வுகளையும், சோகங்களையும் பார்க்கும்போது, இதற்குப் பலியானவர்கள் மீது பொறுப்பைச் சுமத்தும் சோதனைக்கும், கடவுளைப் பற்றியே கேள்வி கேட்கும் சோதனைக்கும் இன்றும் நாம் உட்படுகிறோம், ஆனால், கடவுள் பற்றி நாம் எத்தகைய எண்ணம் கொண்டுள்ளோம் என்று சிந்திப்பதற்கு இஞ்ஞாயிறு நற்செய்தி அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல ஆண்டுகள் தொடர்ந்து காய்க்காமல் இருந்த அத்திமரம் போன்று பெரும்பாலும் நாம் இருக்கின்றோம், கடவுளின் பொறுமை பற்றியும், பாவிகள் மீது அவர் காட்டும் வரையறையில்லாத அக்கறை பற்றியும் சிந்தித்திருக்கின்றோமா என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.