2016-02-29 15:38:00

இது இரக்கத்தின் காலம் – நல்வழியில் செலவழிப்பதற்கே செல்வம்


அந்த ஊருக்கு வருகை தந்த குருநானக் அவர்களை, அந்த ஊரின் எல்லைக்கே சென்று, பெரிய வரவேற்பளித்தார் அந்த ஊர் செல்வந்தர் ஒருவர். ஐயா, நீங்க எங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடணும்னு கேட்டுக்கொண்டார் செல்வந்தர். குருநானக் அவர்களும், அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்குச் சென்றார். ஐயா, இந்த ஊரிலே நான் பெரிய பணக்காரன், உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, எதுவானாலும் செய்றேன், என்னால முடியும் என்று பணிவோடு சொன்னார் அவர். அப்போது குருநானக் அவர்கள், தனது சட்டைப் பைக்குள் கையைவிட்டு ஒரு பழைய தையல் ஊசி ஒன்றை எடுத்தார். அதை அந்தச் செல்வந்தரிடம் கொடுத்து, நீங்கள் இவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டதாலே சொல்றேன், இந்த ஊசியைப் பத்திரமா வைச்சுருங்க, நாம இரண்டு பேரும் இறந்து போனதுக்குப் பின்னாடி, இன்னோர் உலகத்துல நாம சந்திக்கக் கூடிய வாய்ப்பு இருக்கு. அப்போ இந்த ஊசியை என்கிட்டே கொண்டாந்து கொடுங்க. இதுதான் நீங்க எனக்குச் செய்ய வேண்டிய உதவி என்று சிரித்துக்கொண்டே சொன்னார் குருநானக். இதைக் கேட்ட செல்வந்தர், நான் சாகிறப்ப இந்த ஊசியை இன்னோர் உலகத்துக்கு எப்படி எடுத்துக்கிட்டு வர முடியும் என்று கேட்டார். இந்த உலகை விட்டுச் செல்லும்போது, ஊசி போன்ற சிறிய பொருளைக்கூட யாராலும் எடுத்துச் செல்ல முடியாது. அந்நிலையில், உங்களின் செல்வத்தை எப்படி அங்கே எடுத்து வருவீர்கள் என்று கேட்டார் குருநானக். நாம் செய்யும் நன்மை தீமைதான் கடைசிவரை நம்கூட வரும். அதனால் நம்மிடமுள்ள பொருளை அடுத்தவரின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், செல்வத்தால் பலன் ஏதுமில்லை என்றார் குருநானக்.

இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து வாழ அழைக்கிறது இரக்கத்தின் காலம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.