2016-02-27 15:36:00

திருத்தந்தை – நீதி, எல்லாவிதப் பாரபட்சத்தையும் விலக்குகிறது


பிப்.27,2016. இத்தாலிய உற்பத்தி நிறுவனங்கள் கழகத்தின் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட  உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழில் புரியும்போது அறநெறிக் கூறுகள் கடைப்பிடிக்கப்படும் முறை குறித்து ஒன்றுசேர்ந்து சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“ஒன்றுசேர்ந்து உழைத்தல்” என்ற விருதுவாக்குடன் செயல்பட்டுவரும் இக்கழகத்தின் உறுப்பினர்கள், தங்களின் இந்த விருதுவாக்கை, நீதி நிறைந்த சமுதாயத்திற்கு உதவவும், உற்பத்தித் திட்டங்களில் அதை உண்மையாகவே நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென்றும் விண்ணப்பித்தார்.

சமுதாயத்தில் அதிகம் உதவி தேவைப்படும் மற்றும் அடிக்கடி மறக்கப்படும் பல்வேறு குழுக்கள் மத்தியில் இந்த விருதுவாக்கை செயல்படுத்துமாறும் கூறிய திருத்தந்தை, உதவி தேவைப்படும் குழுக்களில் குடும்பம் முக்கியமானது என்றும் கூறினார்.

இக்கழகத்தினரின் ஆசிரியராக, நீதி எப்போதும் இருப்பதாக என்றுரைத்த திருத்தந்தை, எதிலும் எளிதாக நுழையும் வழிகளைத் தேடும், பரிந்துரைகள் மற்றும் பாரபட்சங்களை நீதி புறக்கணிக்கின்றது என்றும் கூறினார்.

நீதியின்றி சுதந்திரம் கிடையாது மற்றும் ஒவ்வொரு மனிதரின் மனித மாண்பை மதிக்காமல் நீதி கிடையாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் இந்த மிகப் பெரிய உற்பத்தி நிறுவனங்கள் கழகம், தனது 106 ஆண்டுகள் வரலாற்றில், தனது தலைவருடன் வத்திக்கானில், முதன்முறையாக, திருத்தந்தையைச் சந்தித்துள்ளது. இக்கழகத்தின் தலைவர் Giorgio Squinzi அவர்கள் தலைமையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று சந்தித்தனர். இச்சந்திப்பில், மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் புகழ்பெற்ற 95 வயது நிரம்பிய Marino Golinelli அவர்கள் உட்பட 11 பேர் தங்களின் சாட்சியங்களைப் பகிர்ந்து கொண்டனர். 

1910ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இத்தாலிய உற்பத்தி நிறுவனங்கள் கழகத்தில், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் உறுப்புக்களாக உள்ளன. மேலும், ஏறக்குறைய 42 இலட்சம் பேர் இக்கழகத்தில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இத்தாலியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ள இக்கழகம் அதன் உறுப்பினர்களுக்கும் உதவி வருகின்றது.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.