2016-02-27 15:26:00

திருத்தந்தை பிரான்சிஸ், ஆர்ஜென்டினா அரசுத்தலைவர் சந்திப்பு


பிப்.27,2016. ஏழ்மை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆர்ஜென்டினா நாட்டு புதிய அரசுத்தலைவர் Mauricio Macri அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமை காலையில் ஆர்ஜென்டினா நாட்டு அரசுத்தலைவர் Macri அவர்களைத் திருப்பீடத்தில் 22 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், மனித உரிமைகள் மதிக்கப்படல் போன்றவற்றுக்காகவும் உழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் மற்றும் திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் Paul Richard Gallagher அவர்களையும் சந்தித்துப் பேசினார் ஆர்ஜென்டினா அரசுத்தலைவர் Macri.

ஆர்ஜென்டினாவின் பொது நலனுக்கு, குறிப்பாக, மனிதநல முன்னேற்றத்தை ஊக்குவித்தல், புதிய தலைமுறைகளின் உருவாக்கம், தற்போதைய பொருளாதாரச் சூழல் போன்றவற்றில் கத்தோலிக்க ஆயர் பேரவை மற்றும் கத்தோலிக்க நிறுவனங்கள் ஆற்றிவரும் நற்பணிகள் பற்றியும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது. 

அர்ஜென்டினாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், ஒருங்கிணைந்த முன்னேற்றம், மனித உரிமைகள் மதிக்கப்படல், வறுமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கைகள், நீதி, அமைதி, சமூக ஒப்புரவு போன்ற தலைப்புகள் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன என்றும், அத்தொடர்பகம் கூறியது.

தனது மனைவி உட்பட பத்து பிரதிநிதிகளுடன் திருத்தந்தையை சந்தித்த அரசுத்தலைவர் Macri அவர்கள், இலத்தீன் அமெரிக்காவில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் அடையாளமாக, Matarà மரத்தாலான சிலுவை, அந்நாட்டு ஒரு கம்பளி மேற்போர்வை போன்றவற்றை, திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். திருத்தந்தையும், தனது நாட்டு அரசுத்தலைவருக்கு, இரு ஒலிவக்கிளைகள் பதக்கம் ஒன்றையும், Evangelli Gaudium, Laudato si' ஆகிய தனது இரு திருமடல்களையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.