2016-02-27 16:04:00

கொரிய மறைசாட்சிகள் திருத்தலங்களில் புனிதக் கதவுகள் திறப்பு


பிப்.27,2016. தென் கொரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, கொடூர அடக்குமுறைகள் ஆரம்பிக்கப்பட்ட 150ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, கொரிய மறைசாட்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள திருத்தலங்களில் புனிதக் கதவுகளைத் திறந்துள்ளது செயோல் உயர்மறைமாவட்டம்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், கொரியக் கத்தோலிக்கத் திருஅவை, மறைசாட்சிகளின் யூபிலி ஆண்டையும் சிறப்பித்து வரும்வேளை, செயோல் உயர்மறைமாவட்டத்தில் மூன்று மறைசாட்சிகள் திருத்தலங்களில் புனிதக் கதவுகளைத் திறந்துள்ளார் செயோல் கர்தினால் Andrew Yeom Soo-jung.

கொரியாவில், 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கத்தோலிக்கரோடு, இக்காலத்தில் வாழும் கத்தோலிக்கரை ஒப்பிடும்போது, இவர்களின் விசுவாசம் பலவீனமாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் Yeom Soo-jung.

இப்புனிதக் கதவுகளைத் திறந்து வைத்த திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் Yeom Soo-jung அவர்கள், இந்த மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டான விசுவாச வாழ்வை விசுவாசிகள் பின்பற்றுவதற்கு நம் ஆண்டவர் உதவுவாராக என்றும் கூறினார்.

மக்கள் மத்தியில் சமத்துவம் அவசியம் என்ற கிறிஸ்தவர்களின் போதனை, கன்ஃபூசியப் போதனைகளுக்கு முரணாக இருந்ததால், அரசரின் ஆணையின் பேரில், 1866ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கிறிஸ்தவர்களுக்கு எதிராக, கொரியாவில் நாடெங்கும் கொடூர அடக்குமுறைகள் தொடங்கின. இதில் ஏறக்குறைய ஒன்பதாயிரம் கத்தோலிக்கர் வன்முறை இறப்புக்கு உள்ளாகினர். இவ்வெண்ணிக்கை அக்காலத்தில் வாழ்ந்த கத்தோலிக்கரில் பாதிப்பேராகும். இந்த அடக்குமுறை, மாபெரும் Byeong-in அடக்குமுறை என அழைக்கப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.