2016-02-26 15:17:00

குடியேற்றதார மரண தண்டனைக் கைதிகள் விடுதலைக்கு அழைப்பு


பிப்.26,2016. வெளிநாடுகளில் மரண தண்டனைக் கைதிகளாக உள்ள 90 பிலிப்பைன்ஸ் நாட்டவர் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் நாடு திரும்புவதற்கு, பிலிப்பைன்ஸ் அரசு நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே ஏற்ற காலம் என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் குடிபெயர்வோர் ஆணையத் தலைவர் Balanga ஆயர் Ruperto Santos அவர்கள், அந்நாட்டு அரசுக்கு விடுத்துள்ள விண்ணப்பத்தில், வெளிநாடுகளில் சிறைகளில் வாடும் பிலிப்பைன்ஸ் நாட்டவரின் துன்பங்கள் மேலும் நீட்டிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார்.

Joseph Urbiztondo என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு குடியேற்றதாரர், குவைத் நாட்டில் 25 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ளவேளை, பிலிப்பைன்ஸ் நாட்டு குடியேற்றதாரக் கைதிகளின் விடுதலைக்காக அழைப்பு விடுத்துள்ளார் ஆயர் Santos.

தன்னோடு வேலை செய்த பங்களாதேஷ் நாட்டவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த Urbiztondo அவர்கள், தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்பத்திற்கு 26 ஆயிரம் டாலர் பணம் செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கும், தனக்கும் தொடர்பே இல்லை என்றே Urbiztondo அவர்கள் கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகின்றது.

குறைந்தது 3,800 பிலிப்பைன்ஸ் நாட்டு குடியேற்றதாரர் வெளிநாடுகளில் சிறையில் உள்ளனர். இவர்களில் 90 பேர் மரண தண்டனை கைதிகள். இவர்களில் 41 பேர் மலேசியாவிலும், 27 பேர் சவுதி அரேபியாவிலும் உள்ளனர்.  

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.