2016-02-26 15:55:00

கிழக்கு ஆப்ரிக்காவில் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை


பிப்.26,2016. உலகின் 15 மிக ஏழை நாடுகளில் ஒன்றான மலாவியில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது கடும் பஞ்சம் நிலவுவதால், 28 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், பசிக்கொடுமையை எதிர்கொள்கின்றனர் என்று யூனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.

2015ம் ஆண்டு டிசம்பருக்கும், 2016ம் ஆண்டு சனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நூறு விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று, மலாவி நாட்டிற்கான, யூனிசெப் நிறுவனப் பொறுப்பாளர் சங்கீதா ஜேக்கப் அவர்கள் கூறினார்.

மலாவி நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சத்திற்கு, எல் நீனோ கடும் வெப்பநிலை காரணம் என்றுரைத்துள்ள ஜேக்கப் அவர்கள், El Niño காலநிலை, பசிபிக் பெருங்கடல் நீரை வெப்பமடையச் செய்வதால், சில பகுதிகளில் கனமழை மற்றும்  சில பகுதிகளில் கடும் குளிர் பாதிப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், El Niño பாதிப்பு, 2017ம் ஆண்டின் ஆரம்பம் வரை, உலகின் பல பகுதிகளில்  இருக்கும் என்று, உலக உணவுத் திட்ட அமைப்பின் Rogerio Bonifacio அவர்கள் கூறியுள்ளார். 

இதற்கிடையே, உலகில் வீணாக்கப்படும் உணவில் கால்பகுதி, உலகில் பசியைப் போக்க உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Romereports / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.