2016-02-26 15:39:00

ஆசிய-பசிபிக் பகுதிகளில் சமய சகிப்பற்றதன்மை அதிகரிப்பு


பிப்.26,2016. இலங்கையில், காணாமல்போனவர்கள் குறித்த விபரங்களைக்  கண்டறிவதிலும், மக்கள் காணாமல் போவதற்குக் காரணமாக இருப்பவர்களை நீதியின்முன் நிறுத்துவதிலும் முன்னேற்றம் காணப்படவில்லை என்று, Amnesty International என்ற பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டில் உலகில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து, ஆண்டறிக்கை வெளியிட்ட இவ்வமைப்பு, இலங்கையின் புதிய அரசு, மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னேற்றுவதாக உறுதியளித்திருந்தது, ஆனால், திட்டமிட்ட கைதுகள், சித்திரவதைகள் உட்பட மனித உரிமைகள் குறித்த பல்வேறு சவால்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன என்று தெரிவித்துள்ளது.

மேலும், 2015ம் ஆண்டில், ஆசிய-பசிபிக் பகுதிகளில், அரசுகளின் பாகுபாடுமிக்க கொள்கைகளால் சமய மற்றும் இனச் சகிப்பற்றதன்மைகள் அதிகரித்துள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

லாவோஸ், மியான்மார், பாகிஸ்தான், இலங்கை, வியட்நாம் உட்பட ஆசிய-பசிபிக் பகுதி நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும் ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ள அவ்வமைப்பு, இந்தோனேசியாவின் Aceh மாநிலத்தில் உள்ளூர் அதிகாரிகள் கிறிஸ்தவ ஆலயங்களைத் தகர்த்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் சமய சுதந்திரம் தொடர்ந்து மறுக்கப்படுவதையும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.