2016-02-25 15:35:00

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதல்ல


பிப்.25,2016. துன்புறும் குழந்தைகளைக் காணும்போது தன் மனம் மிகவும் வேதனையுறுகிறது என்றும், புதுமைகள் ஆற்றும் திறன் தனக்கு இருந்தால், உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் குணமாக்குவேன் என்றும் திருத்தந்தை கூறிய பதில், ஒரு நூல் வடிவில் இவ்வியாழனன்று வெளியாகியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகின் பல நாடுகளிலிருந்து குழந்தைகள் கேட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்ததைத் தொகுத்து, இத்தாலிய மொழியில், L'amore prima del mondo, அதாவது 'உலகம் தோன்றுவதற்கு முன்பே அன்பு' என்ற தலைப்பில் நூல் ஒன்று வெளியாகியுள்ளது.

குழந்தைகள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறிய திருத்தந்தை, 'இவ்வுலகில் இன்றும் புதுமைகள் நடக்கின்றனவா?' என்று ஒரு சிறுவன் எழுப்பியக்  கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, தங்கள் துன்பங்களின் நடுவே, இறைவன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்காமல் மக்கள் வாழ்வது, தன்னைப் பொருத்தவரை ஒரு பெரும் புதுமை என்று பதில் அளித்துள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன், இவ்வுலகைப் படைப்பதற்கு முன், இறைவன் என்ன செய்துகொண்டிருந்தார் என்று எழுப்பியக் கேள்விக்கு, இவ்வுலகைப் படைப்பதற்கு முன்பே, இறைவன் அன்பு கொண்டிருந்தார், அன்பாக வாழ்ந்தார் என்று திருத்தந்தை பதில் அளித்துள்ளார்.

செபிப்பதற்கென்று திருத்தந்தைக்கு விருப்பப்பட்ட இடம் ஒன்று உள்ளதா என்று சிறுமி ஜோசப்பின் எழுப்பியக் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனை எங்கும் காண முடியும், அவர் நம் உள்ளத்தைக் காண்கிறவர் என்பதால், எவ்விடத்திலும் செபிக்க முடியும், பல் மருத்துவரிடம் செல்லும்போதும் தன்னால் செபிக்க முடியும் என்று பதில் சொன்னார்.

இவ்வகையில், சிறுவர், சிறுமியர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ள திருத்தந்தை, உங்கள் வாழ்வில் இன்னும் நீங்கள் செய்யவிழைவது என்ன என்று ஹாலந்து நாட்டின் இரு சிறுவர்கள் எழுப்பியக் கேள்விக்கு இறுதியாகப் பதில் அளிக்கும்போது, நான் தொடர்ந்து புன்சிரிப்புடன் வாழ விரும்புகிறேன், கடவுளைப் பார்த்து புன்சிரிப்புடன் வாழ ஆசைப்படுகிறேன், துன்புறுவோருக்கு உதவிகள் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறி, இந்நூலில் தன் பதில்களை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.