2016-02-25 14:14:00

இது இரக்கத்தின் காலம் – தெளிவு ஏற்பட துன்பங்கள் தேவை


ஒரு கிராமத்தில் சிற்பி ஒருவர், கடவுள் சிலை ஒன்றை அழகாக உருவாக்கினார். அதை அருகிலிருக்கும் நகரத்திற்குக் கொண்டுபோய் விற்க விரும்பினார். அவரிடமிருந்த கழுதையின் முதுகில் அச்சிலையை ஏற்றினார். கழுதை முன்னால் செல்ல, இவர் அதன்பின்னே நடந்து சென்றார். சாலையில் நடந்து சென்ற மனிதர்கள் எல்லாரும் கழுதையின் முதுகில் இருந்த கடவுள் சிலையைப் பார்த்து, மரியாதையுடன் வணங்கி, இரு கன்னங்களிலும் போட்டுக்கொண்டார்கள். இதைப் பார்த்த கழுதை, ஆஹா.. இந்த மனிதர்களுக்குத்தான் என்மீது எவ்வளவு மரியாதை என்று நினைத்தது. அதோடு அதற்குக் கர்வமும் தலைக்கேறியது. இதனால் உற்சாகமாகக் குரல் எடுத்துப் பாடத் தொடங்கியது. கழுதையின் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த சிற்பி, கத்தாதே என்றார். அது அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தொடர்ந்து கத்தியது. எனவே, அது கத்துவதை நிறுத்த வேண்டும் என்பதற்காக, அதன் முதுகில் கம்பால் அடித்தார் சிற்பி. அப்போது கழுதை, ஆஹா, என் முதலாளிக்கு எவ்வளவு இசை ஞானம், நான் பாடுவதை என் முதுகில் தட்டியல்லவா பாராட்டுகிறார் என்று மேலும் பெருமைப்பட்டது. அதனால் இன்னும் சப்தமாகக் கத்தியது. சிற்பியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பலமாக அடித்தார். அப்போது கழுதை மெல்லத் திரும்பிப் பார்த்தது. சிற்பியின் கடுகடுப்பான முகம் தெரிந்தது. சிற்பி தன்னைத் திட்டுகிறார் என்பதும் புரிந்தது. தன் தவறை உணர்ந்த கழுதை கத்துவதை நிறுத்தியது. தடுமாற்றமில்லாமல் நடக்கத் தொடங்கியது. ஆம். வாழ்வில் தெளிவு ஏற்பட அடிகள், துன்பங்கள் தேவைப்படுகின்றன. துன்பத்தின் மதிப்பை உணர வைக்கும் காலம் இரக்கத்தின் காலம்.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.