2016-02-24 15:47:00

திருத்தந்தையைக் கண்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட மெக்சிகோ மக்கள்


பிப்.24,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெக்சிகோ நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மெக்சிகோ மக்கள் சாலையோரங்களில் நின்று அவரைக் கண்டனர் என்ற புள்ளி விவரத்தை மெக்சிகோ ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி முடிய திருத்தந்தை மேற்கொண்ட இந்தப் பயணத்தில், அவர் கலந்துகொண்ட சந்திப்புக்களிலும், ஆற்றியத் திருப்பலிகளிலும், 11,50,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்று மெக்சிகோவின் Efe என்ற ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

எக்காதெபெக் (Ecatepec) புறநகரில் திருத்தந்தை ஆற்றியத் திருப்பலியில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைக்கருகே அமைந்துள்ள ஹுவாரேஸ் நகரில் ஆற்றியத் திருப்பலியில் 2,10,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பழங்குடியினரையும், 85,000த்திற்கும் மேற்பட்ட இளையோரையும் தான் சந்தித்தது, மெக்சிகோவின் உண்மையான செல்வத்திற்குச் சான்று என்று திருத்தந்தை குறிப்பிட்டிருந்தார்.

மெக்சிகோ மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையை நேரில் கண்டது தனக்கு ஒரு உருமாற்ற அனுபவமாக விளங்கியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 21, வழங்கிய மூவேளை செப உரையில் சொன்னது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.