2016-02-24 16:02:00

திருத்தந்தை - உலக அமைதிக்கு, உறுதிமொழிகள் மட்டும் போதாது


பிப்.24,2016. நாடுகளிடையே அமைதியைக் கொணர திருப்பீடம் எப்போதும் முயன்று வந்துள்ளது என்றும், பல்வேறு நாடுகளில், தலத்திருஅவைகள் உள்நாட்டு அமைதியை வளர்க்க உதவி செய்துள்ளன என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மோதலுக்குப் பின் அமைதியைக் கட்டியெழுப்புதல் என்ற தலைப்பில், ஐ.நா.வின் பாதுகாப்பு அவை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற ஆயர் சைமன் கஸ்ஸாஸ் (Simon Kassas) அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

ஒரு நாட்டின் அரசு தன் அதிகாரத்தை இழந்து சிதைந்து போவதால் விளையும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்கவும், போருக்குப் பின் ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வழிகளைக் கண்டுபிடிக்கவும் ஐ.நா. அவை 2005ம் ஆண்டு உருவாக்கிய அமைப்பான, அமைதியைக் கட்டியெழுப்பும் அவையைக் குறித்து, ஆயர் கஸ்ஸாஸ் அவர்கள் தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

உலக அமைதியைக் காப்பதற்கு நாம் எடுக்கும் உறுதிமொழிகள் மட்டும் போதாது, அவற்றைச் செயல்படுத்த அரசுத்  தலைவர்களிடமும், அரசுகளிடமும் திண்ணமான மன உறுதி தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா.வின் 70வது பொது அமர்வில் (2015,  செப்டம்பர் 25) உரையாற்றியதை, ஆயர் கஸ்ஸாஸ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஐ.நா.வில் வழங்கிய உரையில், கல்விக்கு வழங்கப்பட வேண்டிய மிக முக்கியமான இடத்தையும், குடும்பங்களும், சமுதாயமும் வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வி வழங்கவேண்டிய கடமையையும் திருத்தந்தை வலியுறுத்தியதை, ஆயர் கஸ்ஸாஸ் அவர்கள் தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

தரமான கல்வி மற்றும் கண்ணியமான வேலைகள் அனைவருக்கும் கிடைப்பது, உலக அமைதியை உறுதி செய்வதற்குப் பெரிதும் உதவும் என்று ஆயர் கஸ்ஸாஸ் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.