2016-02-24 16:12:00

கடமைக்கு நிறைவேற்றும் ஒரு சடங்காக திருப்பலியைக் கருதக்கூடாது


பிப்.24,2016. சமுதாயத்தின் அநீதிகளால் காயப்பட்டிருக்கும் மக்களுக்கு திருநற்கருணை என்ற அருளடையாளம் இறைவனின் இரக்கத்தை வழங்குகிறது என்று பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால் Orlando Quevedo அவர்கள் கூறினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் மிந்தனாவோ தீவில் உள்ள 21 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான அருள் பணியாளர்கள் கலந்துகொண்ட ஆண்டு கூட்டமொன்றில் உரையாற்றிய கொட்டபாட்டோ (Cotabato) பேராயர் கர்தினால் Quevedo அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருப்பலி ஆற்றுவது, அருள்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயர்ந்த கொடை என்பதால், அதனை, கடமைக்கு நிறைவேற்றும் ஒரு சடங்காக கருதக்கூடாது என்று கர்தினால் Quevedo அவர்கள் அருள் பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

மிந்தனாவோ பகுதியில் பணியாற்றி, மறைசாட்சியாக உயிர் துறந்த இயேசு சபை அருள் பணியாளர் பிரான்செஸ்கோ பல்லியோலா (Francesco Palliola) அவர்களை அருளாளராக உயர்த்தும் பணிகள் துவங்கியுள்ளன என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Quevedo அவர்கள், இத்தகைய அருள் பணியாளர்கள் ஓர் உந்து சக்தியாகச் செயலாற்றுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.