2016-02-24 15:18:00

அமைதி ஆர்வலர்கள் : 2007ல் நொபெல் அமைதி விருது-பாகம் 2


பிப்.24,2016. 2007ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது, Albert Arnold Gore Jr. அவர்களுக்கும், காலநிலை மாற்றம் குறித்த IPCC என்ற பன்னாட்டுக் குழுவுக்கும் வழங்கப்பட்டது. காலநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அல் கோர் அவர்களும், IPCC குழுவும் எடுத்த முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டது. ஆல்பெர்ட் அர்னால்டு கோர் ஜூனியர் அவர்கள், அல் கோர் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல்வாதி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர், அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களின் அரசில், 1992ம் ஆண்டு முதல், 2000மாம் ஆண்டு வரை, உதவி அரசுத்தலைவராகப் பணியாற்றியவர். அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களவையில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்த இவர், அந்நாட்டின் செனட்டராகவும் பணியாற்றினார். இரண்டாயிரமாம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு எதிராக, அரசுத்தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோற்றார். ஆஸ்திரேலியாவின் Fairfax ஊடகத்திற்கு ஒருமுறை பேட்டியளித்த அல் கோர் அவர்கள்,  காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு எதிராக அரசியல்வாதிகள் செயல்பட்டால், அவர்களிடம் வரலாறு கனிவாக நடந்து கொள்ளாது என்று எச்சரித்திருக்கிறார். காலநிலை மாற்றம், மிக முக்கியமான ஓர் உலகளாவிய விவகாரம். ஆனால், இவ்விடயத்தில் அரசியல் தலைவர்களின் நடவடிக்கை என்ன என்ற கேள்வியையும் இவர் எழுப்பியுள்ளார். இந்த உலகம் சந்திக்கும் மிக நெருக்கடியான காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகளை வரலாறு மன்னிக்காது என்றும் கூறினார் அல் கோர்.

அல் கோர் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டனில் 1948ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை ஆல்பெர்ட் கோர் சீனியர் அவர்கள், அந்நாட்டின் Tennessee தென் மாநிலத்தின் மக்களவை பிரதிநிதியாகவும், செனட்டராகவும்(1953-71) பணியாற்றியவர். கல்வியில் சிறந்து விளங்கிய அல் கோர் அவர்கள், “அரசுத்தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் தொலைக்காட்சியின் தாக்கம்,1947-1969” என்ற தலைப்பில் ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இதற்குப் பின்னர், 1969ம் ஆண்டு ஜூனில், அமெரிக்க அரசில் உயர்ந்த மதிப்பைப் பெற்றார். இவர் வியட்நாம் போரை எதிர்த்தாலும், அமெரிக்க இராணுவத்தில் 1969ம் ஆண்டு ஆகஸ்டில் சேர்ந்தார். தான் ஓர் அமெரிக்கக் குடிமகன் என்ற உணர்வே இராணுவத்தில் சேர்வதற்குக் காரணம் என்று இவர் கூறியிருக்கிறார். இராணுவத்தில் The Army Flier என்ற தினத்தாளின் செய்தியாளர் பணி இவருக்குக் கொடுக்கப்பட்டது. வியட்நாம் போர், குடியுரிமைகள் போன்ற பல விவகாரங்களில் இவரது தந்தை முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்ததால், 1970ம் ஆண்டு நவம்பரில் செனட்டர் உறுப்பினர் நிலையை இழந்தார்.

அல் கோர் அவர்கள், 1971ம் ஆண்டு வியட்நாமிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு திரும்பி Tennesseeல் பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கினார். அச்சமயத்தில் அரசியல் பற்றியும், இலஞ்ச ஊழல் பற்றியும் தெரிந்து கொண்டார். 1974ம் ஆண்டில் வான்டர்பில்ட் சட்டப் பள்ளியில் பெயரைப் பதிவு செய்தார் அல் கோர். ஆனால், 1976ம் ஆண்டு மார்ச்சில், அப்பள்ளியைவிட்டு விலகி, Tennessee மாநில மக்களவை பிரதிநிதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பின்னர், 1978, 1980, 1982ம் ஆண்டுகளின் மக்களவை பிரதிநிதித் தேர்தல்களிலும், 1984 மற்றும் 1990ம் ஆண்டுகளின் செனட்டர் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார் அல் கோர். 1993ம் ஆண்டு சனவரி 20ம் நாள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் 45வது உதவி அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எட்டு ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். அச்சமயத்தில், பில் கிளிண்டன் அவர்களின் பொருளாதாரக் குழுவில் தலைவராகவும் இருந்தார். செனட் அவையின் தலைவர், காபினெட் உறுப்பினர், தேசிய பாதுகாப்பு அவையின் உறுப்பினர் மற்றும் நிர்வாக அளவில் எடுக்கப்படும் முயற்சிகளுக்குத் தலைவராகவும் பணியாற்றினார் அல் கோர். காலநிலை மாற்றம் முன்வைக்கும் அச்சுறுத்தல்கள் பற்றி இவர் உலகுக்கு எடுத்துரைத்த நடவடிக்கைகளைப் பாராட்டி, 2007ம் ஆண்டில் இவருக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. Tennessee மாநிலத் தலைநகர் Nashvilleல், தனது மனைவியோடு வாழ்ந்துவரும் அல் கோர் அவர்களுக்கு, நான்கு பிள்ளைகளும், மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவர், பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்.      

அல் கோர் அவர்கள், 1992ம் ஆண்டில் வெளியிட்ட Earth in the Balance என்ற நூல், சிறந்த விற்பனை நூல்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 2006ம் ஆண்டில் இவர் வெளியிட்ட An Inconvenient Truth என்ற நூல், சிறந்த ஆவணப்படமாகவும் வெளியிடப்பட்டது. இளையோரை மையப்படுத்தி நடத்தப்படும் அமெரிக்க Current தொலைக்காட்சிக்குத் தலைவராகவும், ஆப்பிள் நிறுவன இயக்குனர்கள் குழுவில் ஒருவராகவும், கூகுள் நிறுவனத்தின் மூத்த ஆலோசகராகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவராகவும், தற்போது பணியாற்றி வருகிறார் அல் கோர். இவற்றோடு, இன்னும் பல பொதுப்பணிகளையும் ஆற்றி வரும் அல் கோர் அவர்கள், நொபெல் அமைதி விருது தவிர, மற்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இப்பூமியின் வெப்பநிலை உயர்வு 2 செல்சியுஸ் டிகிரிக்கு மேல் அதிகரிக்காத அளவில் இருக்க வேண்டுமெனில், வளர்ந்த நாடுகள், 2050ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைந்தது எண்பது விழுக்காடு அளவு குறைக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. வெப்பநிலை உயர்வுக்கு, கரியமில வாயு வெளியேற்றம் மட்டும் காரணமல்ல, விலங்குகளின் கழிவுகள் மற்றும் எரிபொருள் பயன்பாடும் காரணமாகும். இப்புவியில் வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவில் 37 விழுக்காட்டுக்கு விலங்குகளின் கழிவுகளும், நைட்ரஸ் வாயுவில் 65 விழுக்காட்டுக்கு எரிபொருள் பயன்பாடும் காரணங்களாகும். இப்புவியை வெப்பமடையச் செய்வதில், கரியமில வாயுவைவிட, மீத்தேன் வாயு, 25 மடங்கும், நைட்ரஸ் வாயு 298 மடங்கும் வீரியமுள்ளவை. இந்த ஆபத்தை உணர்ந்து வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சிகளை எடுப்போம். நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்போம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.