2016-02-23 15:23:00

மியான்மாரில் தேசிய ஒப்புரவு ஏற்படும், கர்தினால் போ நம்பிக்கை


பிப்.23,2016.  மியான்மாரில் புதிய அரசு ஆட்சிக்கு வந்திருக்கும் இவ்வேளையில், 1962ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அந்நாட்டை ஆட்சி செய்த இராணுவத் தலைவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது உட்பட, நாட்டில் தேசிய ஒப்புரவு ஏற்படும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ.  

அரசு மதம், புத்த மதமாக உள்ள மியான்மாரில், 1960களில் இராணுவ அரசால் பறிமுதல் செய்யப்பட்ட கத்தோலிக்கப் பள்ளிகள் திருப்பி வழங்கப்படுவது உட்பட,   சமய சுதந்திரம் பெரிய அளவில் மதிக்கப்பட வேண்டும் என்ற தனது ஆவலையும் வெளியிட்டுள்ளார் கர்தினால் போ.

Eglises d'Asie என்ற ப்ரெஞ்ச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கர்தினால் போ அவர்கள், கத்தோலிக்கப் பள்ளிகளை, தனிநபர்களின் பெயரில் பதிவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி உட்பட, மியான்மாரில் அண்மையில் காணப்படும் வளர்ச்சி பற்றியும் பாராட்டினார்.

அதேநேரம், பள்ளிகளைத் திறப்பதற்கு, திருஅவைக்குள்ள உரிமை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும், ஆலயங்களையும், துறவு இல்லங்களையும் கட்டுவதற்கு, புதிய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்க வேண்டும் என்று கத்தோலிக்கர் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார் கர்தினால் போ.

மியான்மாரின் 5 கோடியே 15 இலட்சம் மக்களில் 89 விழுக்காட்டினர் புத்த மதத்தினர், 4 விழுக்காட்டினர் முஸ்லிம்கள், 3 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் மற்றும் ஒரு விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.   

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.