2016-02-23 11:01:00

அருள்பணி லொம்பார்தி வத்திக்கான் வானொலிப் பணியிலிருந்து ஓய்வு


பிப்.23,2016.  வத்திக்கான் வானொலியின் தலைமை இயக்குனராக, 2005ம் ஆண்டிலிருந்து  மிகச் சிறப்பாகப் பணியாற்றிவந்த இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அப்பணியிலிருந்து இம்மாதம் 29ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

வத்திக்கான் வானொலியின் நிகழ்ச்சிகள் பொறுப்பாளராக, 1990ம் ஆண்டில் பணியை ஆரம்பித்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், 2005ம் ஆண்டிலிருந்து அதன் பொது இயக்குனராகப் பணியைத் தொடங்கினார். வத்திக்கான் வானொலியில் கடந்த 26 ஆண்டுகளாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய இவர், இந்த பிப்ரவரி 29ம் தேதியோடு வத்திக்கான் வானொலிப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதேசமயம், திருப்பீடச் செய்தித் தொடர்பாளராகப் பணியைத் தொடர்வார் அருள்பணி லொம்பார்தி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி, வத்திக்கான் சமூகத் தொடர்புத் துறையில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டுவந்ததன் பயனாக,  வத்திக்கான் சமூகத் தொடர்பு செயலகத்தை உருவாக்கினார். இந்த மாற்றத்தின் ஒரு கட்டமாக, வத்திக்கான் வானொலியில் மற்றுமொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வத்திக்கான் வானொலியின் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிய முனைவர் ஆல்பெர்த்தோ கஸ்பாரி அவர்களும், பிப்ரவரி 29ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். கடந்த பல ஆண்டுகளாக, திருத்தந்தையரின் திருத்தூதுப் பயணங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் கஸ்பாரி அவர்கள் பணியாற்றி வந்தார்.

அதேநேரம், வத்திக்கான் வானொலியின் இடைக்கால நிர்வாக இயக்குனர் மற்றும் சட்டமுறைகளின் பிரதிநிதியாக, வழக்கறிஞர் ஜாக்கமோ கிசானி(Giacomo Ghisani) அவர்களை, வத்திக்கான் சமூகத் தொடர்பு செயலகத் தலைவர் அருள்பணி Dario Edoardo Viganò அவர்கள் நியமித்துள்ளார். ஜாக்கமோ கிசானி அவர்கள், வத்திக்கான் வானொலியின் பன்னாட்டு உறவுகள் மற்றும் சட்ட விவகாரத் தலைவராகவும், சமூகத் தொடர்பு செயலகத்தின் துணைத் தலைவராகவும் ஏற்கனவே பணியாற்றி வருபவர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “Motu proprio” விதிமுறைகளின்படி, வத்திக்கான் சமூகத் தொடர்புத் துறைகளை ஒன்றிணைக்கும் வழிமுறையில், இந்தப் பணி ஓய்வுகளும், புதிய நியமனமும் அமைந்துள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தும் முயற்சியில், வத்திக்கான் வானொலியும், வத்திக்கான் தொலைக்காட்சி மையமும்(CTV)  ஏற்கனவே இணைந்து பணிகளை ஆற்றி வருகின்றன. அதேபோல், திருப்பீட சமூகத் தொடர்பு அவையும், திருப்பீடச் செய்தித் தொடர்பகமும் இணைந்து பணியாற்றி வருகின்றன. 

வத்திக்கான் சமூகத் தொடர்புப் பணிகளில், வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி மையம், திருப்பீட சமூகத் தொடர்பு அவை, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், வத்திக்கான் இணையதளம், லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழ், வத்திக்கான் அச்சகம், வத்திக்கான் புகைப்படப் பணித்துறை, வத்திக்கான் வெளியீட்டகம் ஆகியவை உள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.