2016-02-22 15:00:00

குற்றவாளிகளும் வாழ்வதற்குரிய உரிமையைக் கொண்டுள்ளனர்


பிப்.22,2016. உலகில் மரண தண்டனைகள் இரத்து செய்யப்படவும், சிறைகளின் தரம் மேம்படுத்தப்படவும் கிறிஸ்தவர்கள் உழைக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், கிறிஸ்தவர்களுக்கும், நன்மனம் கொண்ட அனைவருக்கும் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதை இரத்து செய்வதற்கு மட்டுமன்றி, சிறைகளின் நிலைமைகளை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுப்பது, கைதிகளின் மனித மாண்பை மதிப்பதாக இருக்கும் என்று கூறினார்.

உரோம் சான் எஜிதியோ கத்தோலிக்க பக்த அமைப்பு, “மரண தண்டனை இல்லாத உலகம்”என்ற தலைப்பில், ஓர் அனைத்துலக கருத்தரங்கை இத்திங்களன்று தொடங்கியது குறித்து குறிப்பிட்டத் திருத்தந்தை, மரண தண்டனையை இரத்து செய்வதற்கு ஒருமித்த தீர்மானங்களை எடுக்குமாறு, நாடுகளின் தலைவர்களின் மனசாட்சிக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

இந்தக் கருத்தரங்கு, உலகில் மரண தண்டனைகள் நிறுத்தப்படுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் கூறிய திருத்தந்தை, கொலை செய்யாதே என்ற கடவுளின் கட்டளை, அப்பாவிகள் மற்றும் குற்றவாளிகள் மீது அக்கறை காட்டத் தூண்டுகிறது, குற்றவாளிகளும், கடவுளின் கொடையாகிய வாழ்வைப் பெறுவதற்கு, முழு உரிமையையும் கொண்டுள்ளனர் என்றும் கூறினார். 

இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு உழைக்குமாறு,  கத்தோலிக்கருக்கும், நன்மனம் கொண்ட அனைவருக்கும்  அழைப்பு விடுக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.