2016-02-22 14:37:00

இது இரக்கத்தின் காலம் – தலைக்கனம் தலைகுனிவை ஏற்படுத்தும்


உடலளவில் பலசாலி ஒருவர், சீனாவில் இருந்த சிறந்த அறிஞர் ஒருவரைத் தேடிச் சென்றார். அந்த அறிஞரைச் சந்தித்த பலசாலி, ஐயா, நீங்கள் அறிவில் பலசாலி, நான் உடம்பில் பலசாலி, அதனால் நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார். பலசாலியைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த அந்த அறிஞர், தம்பி, நீங்கள் எந்த விதத்தில் பலசாலி என்று கேட்டார். “ஐயா, ஒரு பெரிய பாறாங்கல்லை அலக்காத் தூக்கி என்னால எறிய முடியும், நம்ம ஊர் எல்லைக்கு வெளியே நின்னு அக்கல்லைத் தூக்கி எறிஞ்சா, அது நம்ம நகரத்துச் சுவரைத் தாண்டிக்கிட்டுப்போய் விழுந்துடும், அவ்வளவு வேகமா என்னால பாறாங்கல்லை வீச முடியும்” என்றார் பலசாலி. அப்படியா, சரி வா, ஒரு சோதனை செய்து பார்ப்போம் என்று சொல்லி, பலசாலியைக் கூட்டிக்கொண்டு நகரத்தின் வளாகப் பகுதிக்கு வந்தார் அறிஞர். பின்னர், தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பட்டுக் கைக்குட்டையை எடுத்து பலசாலியிடம் கொடுத்து, இந்தாப்பா, இதை நகரத்துச் சுவருக்கு அப்பால் போய் விழுகிற மாதிரி எறிய முடியுமா என்று கேட்டார். பெரிய பாறாங்கல்லையே தூக்கி வீசும் எனக்கு இதென்ன பெரிய காரியம் என்று சொல்லி, பலம் கொண்ட மட்டும் பட்டுக் கைக்குட்டையை வேகமாகப் பலமுறை வீசினார் பலசாலி. கனம் இல்லாத அந்தக் கைக்குட்டை சுவரைத் தாண்டிப் போகவே இல்லை. என்ன நண்பா, முடியவில்லையா? என்று கேட்டதும், பலசாலி தலை குனிந்தார். சரி, கொடு நான் முயன்று பார்க்கிறேன் என்று, அந்தக் கைக்குட்டையை பலசாலியிடமிருந்து வாங்கி, அதில் ஒரு சிறிய கல்லை வைத்தார் அறிஞர். கல் தெரியாத அளவுக்கு, அதைத் துணியால் மூடி சுருட்டிப் பிடித்தார். அந்தக் கல்லோடு சேர்த்து அந்தக் கைக்குட்டையை வேகமாக வீசி எறிந்தார். ஒரே வீச்சில் அது சுவருக்கு அடுத்த பக்கத்தில் போய் விழுந்தது. அப்போது பலசாலி தனது தோல்வியை ஏற்று, தலைகுனிந்தார். பலசாலி என்ற தனது தற்பெருமையிலிருந்தும் அவர் விடுபட்டார். இது இரக்கத்தின் காலம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.