2016-02-22 14:46:00

அன்றாட வாழ்வில் இரக்கப் பண்பை நடைமுறைப்படுத்துங்கள்


பிப்.22,2016. திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை, மனத்தாராளத்துடனும், இரக்கத்துடனும் வழிநடத்தி, எல்லாருக்கும் எடுத்துக்காட்டுகளாய் வாழுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர் தூய பேதுருவின் தலைமைப்பீட விழாவான பிப்ரவரி 22, இத்திங்களன்று திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் அனைவரும் இரக்கத்தின் யூபிலி விழாவைச் சிறப்பித்ததை முன்னிட்டு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இத்திருப்பலிக்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் அனைவருக்கும், இயேசு சபை அருள்பணியாளர் மாற்கோ ரூஃப்னிக் அவர்கள், “நம் அன்றாட வாழ்வில் இரக்கம்” என்ற தலைப்பில், தியானச் சிந்தனைகளை வழங்கினார். அதன்பின்னர், அங்கிருந்து அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் பவனியாக, புனிதக் கதவு வழியாக வத்திக்கான் பசிலிக்காவுக்குச் சென்றனர்.

பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களின் மந்தையை மேய்க்கும் மேய்ப்பர்கள் மந்தைக்கு எடுத்துக்காட்டுகளாக வாழ்வதற்கு, முதலில், அவர்கள் தங்கள் வாழ்வில் கடவுளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

கடவுள், காணாமல்போன ஆடுகளைத் தேடிப்போகிறார், அந்த ஆடுகளை மீண்டும் மந்தையில் சேர்க்கிறார், காயம்பட்டவை மீது அக்கறை காட்டி, நோயுற்ற ஆடுகளைக் குணப்படுத்துகிறார் என்பதையும் நினைவுபடுத்திய திருத்தந்தை, இத்தகைய நடத்தை, எல்லைகளற்ற அன்பின் அடையாளம் என்று கூறினார் திருத்தந்தை.  

வத்திக்கானில் அனைத்துப் பணியிடங்களிலும் உறுதியான மேய்ப்புப்பணி எண்ணத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.