2016-02-20 15:03:00

பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி அமைதிக்காக குரல் கொடுத்தவர்


பிப்.20,2016. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னாள் பொதுச் செயலர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி அவர்கள், தான் வகித்த அத்தனை பதவிகளிலும் அமைதிக்காக குரல் கொடுத்தவர் மற்றும் தனது நாட்டிற்கு விசுவாசமுள்ள மனிதராக வாழ்ந்தவர் என்று பாராட்டினார் எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை 2ம் Tawadros.

எகிப்து நாட்டைச் சேர்ந்த பூத்ரோஸ் காலி அவர்களின் இறுதி அடக்கச் சடங்கை, கெய்ரோ காப்டிக் சபை பேராலயத்தில், பிப்ரவரி 18, இவ்வியாழனன்று நிறைவேற்றிய  முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்கள், பூத்ரோஸ் காலி அவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தி, அவர் வாழ்வுமுறையையும் பாராட்டிப் பேசினார்.

1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ஐ.நா. பொதுச் செயலராகப் பணியாற்றிய பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி அவர்கள், ஆப்ரிக்காவிலிருந்து இப்பதவியை வகித்த முதல் நபராவார். எகிப்திய அரசியல்வாதியும், தூதரக அதிகாரியுமான இவர், தனது 93வது வயதில் பிப்ரவரி 16ம் தேதி காலமானார்.

பூத்ரோஸ் காலி அவர்களின் மரணத்தையொட்டி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் இரங்கல் தந்தியை அனுப்பியிருந்தார். ஐ..நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்களும், ஐ.நா.வும் இரங்கல் செய்திகளை அனுப்பியிருந்தன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.