2016-02-20 15:11:00

தவக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


உயிரியல் தொடர்பான ஒரு பாடத்துடன் நம் ஞாயிறு சிந்தனைகளை இன்று ஆரம்பிப்போம். நமது உடலில் ஏறத்தாழ 10 இலட்சம் கோடி உயிரணுக்கள் (10 trillion cells) உள்ளதெனச் சொல்லப்படுகிறது. அவற்றில் 16 விழுக்காடு, அதாவது,  ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி உயிரணுக்கள் நமது தோல் பகுதியாக உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 40,000 உயிரணுக்கள் ஒவ்வொரு மணி நேரமும் இறந்து, புது உயிரணுக்கள் உருவாகின்றன.

உங்கள் சருமத்தை இளமை மாறாமல் அதே நிலையில் வைத்திருக்க எங்கள் 'க்ரீமை'ப் பயன்படுத்துங்கள் என்று சொல்லும் அனைத்து விளம்பரங்களும் அப்பட்டமான பொய். உலகின் எந்த ஒரு ‘க்ரீமு’ம் நமது தோலை மாறாமல் வைத்திருக்க முடியாது. ஒரு நாளைக்கு நாம் 10 இலட்சம் உயிரணுக்களை இழக்கிறோம், உருவாக்குகிறோம். எனவே, ஏதோ ஒரு 'க்ரீம்' நமது தோலை இளமை மாறாமல் காக்கும் என்பதை நம்புவதற்குப் பதில், ஒவ்வொரு நொடியும் நமது உடல் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதை நம்புவதே மேல். மனிதராய் பிறந்த அனைவருக்கும், உயிரினங்கள் அனைத்திற்கும் உள்ள ஓர் அடிப்படை நியதி, மாற்றம்.

தங்கள் நிறுவனப் பொருள்களைப் பயன்படுத்தினால், மாற்றங்கள் விரைவில் வரும் என்ற மற்றொரு பொய்யையும் விளம்பர உலகம் தயக்கமின்றி நம்மீது திணித்து வருகிறது. விரைவில் வரும் மாற்றங்கள், வந்த வேகத்தில் மறைந்துவிடும். நேரம் எடுத்து, மெதுவாக வரும் மாற்றங்களே நிலைத்து நிற்கும். கூட்டுப்புழு ஒரு நொடியில் வண்ணத்துப் பூச்சியாக மாறும் என்று எதிர்பார்ப்பது, ஆபத்தானது. பல ஆண்டுகளுக்கு முன்னால் "கூட்டுப் புழுவும், வண்ணத்துப் பூச்சியும்" என்ற தலைப்பில் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு பகுதி இது:

கூட்டுப்புழுவில் ஒரு ஓட்டை விழுந்தது. அதைப் பார்த்த இளைஞன் பரபரப்படைந்தான். உள்ளிருந்து ஓர் உயிர் அசைந்து, ஆடி, ஓட்டையைப் பெரிதாக்க முயன்றதைப் பார்த்தான். கூட்டை உடைத்துக்கொண்டு, வண்ணத்துப் பூச்சி விரைவில் வெளியே வரும் என்று காத்திருந்தவனுக்கு பெரும் ஏமாற்றம். ஒருவேளை உள்ளிருந்த உயிரால் ஒன்றும் செய்ய முடியவில்லையோ என்று எண்ணினான். அதற்கு உதவி செய்யும் எண்ணத்தோடு, ஒரு கத்தியின் உதவியால், அந்த ஓட்டையை இன்னும் பெரிதாக்கினான். உள்ளிருந்து ஒரு பூச்சி வெளியே வந்தது. பார்ப்பதற்கு விகாரமாய் இருந்தது. ஊதிப் பருத்த உடல், சுருங்கிப்போன இறக்கைகள் என்று வெளியே வந்த அந்தப் பூச்சி, எவ்வகையிலும் அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் போல் இல்லை.

உதவி என்று நினைத்து, அவன் செய்தது, விபரீதமாக முடிந்தது. இயற்கையின் போக்கு அவனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால், இப்படி அவன் செய்திருக்க மாட்டான். கூட்டுப்புழு அக்கூட்டிலிருந்து வெளியேற மேற்கொள்ளும் போராட்டம் நீண்டதொரு போராட்டம். அனால், அந்தப் போராட்டத்தின்போது அதன் உடலிலிருந்து வெளியேறும் திரவம், அந்தப் புழுவின் உடலைச் சுருக்கும், இறக்கைகளை வளர்க்கும், போராட்டத்தின் இறுதியில், அழகான வண்ணத்துப் பூச்சி, வெளியேறி, பறக்கும். மாற்றம் உருவாக, போராட்டம் தேவை. போராட்டமும், துன்பமும் ஈன்றெடுக்கும் குழந்தைதான் மாற்றம். இதைப் புரிந்துகொள்ளாமல், மாற்றங்களை விரைவில் உருவாக்க, விளம்பர, வியாபார உலகம் தரும் சுருக்கு வழிகளில் சிக்கினால், விபரீதங்கள், விவகாரங்கள், விகாரங்கள் நேர வாய்ப்பு உண்டு.

மாற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன் என்ற கேள்வி எழுகிறதா? பதில், நம் ஞாயிறு வாசகங்களில் அடங்கியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு சந்தித்த சோதனைகளைப் பற்றி சிந்திக்கவும், இரண்டாம் ஞாயிறு, இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வைச் சிந்திக்கவும், வழிபாட்டு வாசகங்கள் அழைக்கின்றன. சோதனைகள், மனித வாழ்வின் இணைபிரியாத ஓர் அனுபவம் என்பதுபோல், உருமாற்றமும் மனித வாழ்வின் மையமான ஓர் அனுபவம். மேலும், தவக்காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் ஓர் எண்ணம் – மாற்றம்... குறிப்பாக, மனமாற்றம். மனம் மாறும்போது, அதற்கு இணையாக வாழ்வு மாறும், இவ்வுலகமும் மாறும்.

மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? நமக்குள்ளிருந்தா அல்லது வெளி உலகிலிருந்தா? நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும், சூழலும் மாறினால், நாமும் மாறுவோம் என்று பல நேரங்களில் எண்ணுகிறோம், நம்புகிறோம். தீர ஆராய்ந்தால், நமக்குள் உருவாகும் மாற்றங்களே, பிற மாற்றங்களின் அடித்தளமாய் அமையும்; அவையே, நீண்ட காலம் நீடிக்கும் என்பதை உணரலாம்.

மாற்றங்கள் நமக்குள்ளிருந்து ஆரம்பமாக வேண்டும் என்று சிந்திக்கும்போது, அருள்தந்தை அந்தனி டி மெல்லோ (Anthony de Mello) அவர்களின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. வயது முதிர்ந்த ஒருவர் தன் வாழ்வைத் திரும்பிப் பார்த்தபோது, இவ்வாறு கூறினார்: “புரட்சிகளை அதிகம் விரும்பிய ஓர் இளைஞனாய் நான் இருந்தபோது, ‘கடவுளே, உலகை மாற்றும் வரம் தா!’ என்று வேண்டினேன். நடுத்தர வயதை அடைந்தபோது என் செபம் சிறிது மாறியது: ‘கடவுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா!’ என்பது என் செபமானது. இப்போது வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்பதை உணர்கிறேன். இப்போது நான் வேண்டுவது இதுதான்: ‘கடவுளே, என்னையே நான் மாற்றிக்கொள்ளும் வரம்தா!’ என்பதே, என் இப்போதையச் செபம். இந்த செபத்தை நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறியிருக்கும். ஒரு வேளை என்னைச் சுற்றியிருந்தவர்களும், இந்த உலகமும் மாறியிருக்கும்” என்று அந்த முதியவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

இயேசு உருமாறிய நிகழ்வில், இரு அம்சங்களைக் கொஞ்சம் ஆழமாக அலசிப் பார்க்கலாம். ஒன்று, "அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது” (லூக்கா 9:29) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார். செபம் ஒருவரது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் பலமுறை சிந்தித்திருக்கிறோம். செபத்தின் வல்லமையை, அதனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் தவக்காலத்தில் ஓரளவாகிலும் நாம் உணரமுயல்வோம்.

இரண்டாவதாக, இயேசு உருமாறியபோது, மோசே, எலியா இருவருடன் பேசிக் கொண்டிருந்தார் என வாசிக்கிறோம். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தனர்? "மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்” (லூக்கா 9:31). ஒளிவெள்ளம் சூழ்ந்த உன்னதமான அந்நேரத்தில், பேசுவதற்கு வேறு எந்த விடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? இயேசு, தன் மரணத்தை முன்னறிவித்ததால், மனமுடைந்து போயிருந்த சீடரின் கலக்கத்தை நீக்கத்தானே இந்த உருமாற்ற அனுபவம்? இந்நேரத்தில் மீண்டும் அதே மரணம் பற்றி பேச வேண்டுமா? நமக்கு ஒரு பாடம் இங்கே உண்டு.

புகழின் உச்சியில், மேகத்தில் மிதந்து வரும்போது, நம்மில் பலருக்கு, சூழ்நிலை மறந்துபோகும். தலைகனம் கூடிவிடும். அந்த கனம் தாங்காமல், நாம் மிதந்துவரும் மேகம் கிழிந்துபோகும், பலவந்தமாக பூமியில் விழவேண்டி வரும். அதற்கு மாறாக, என்னதான் புகழும் பெருமையும் நம்மை உச்சியில் ஏற்றி வைத்தாலும், ஏறிய ஏணியை மறக்கக்கூடாது. எவ்விடத்திலிருந்து ஏறிவந்தோம் என்பதையும் மறக்கக்கூடாது. புகழின் உச்சியில், இருக்கும்போது, பல்லக்கில் பவனி வருவதுபோல் உணர்ந்தாலும், அந்த பல்லக்கைத் தாங்கிவரும், இதுவரை நம்மைத் தாங்கிவந்த மற்றவரை மறக்காமல் வாழ்வது நல்லது. இந்தப் புகழ் உச்சி, பயணத்தின் முடிவல்ல, நாம் இன்னும் போகவேண்டிய தூரம் உள்ளது என்பதையும் மறக்கக்கூடாது. உருமாறிய இயேசு, உள்ளுணர்த்தும் பாடங்கள் இவைதான். கண்ணைப் பறிக்கும் ஒளியுடன், இயேசு உருமாறிய வேளையிலும், அவரது வாழ்வின் குறிக்கோளை, அவர் மேற்கொள்ள வேண்டிய சிலுவை மரணத்தை மறக்கவில்லை.

சொல்லப்போனால், அவர் தன் பணிவாழ்வின் துவக்கத்தில், ஒரு மலைமீது நின்று, 'பேறுபெற்றோர்' என்று பறைசாற்றியபோதே, அவர் கண்முன் கல்வாரி மலை தெரிந்திருக்க வேண்டும். இயேசுவின் மலைப்போழிவும், மரணமும் நிகழ்ந்த இருமலைகளையும் இணைத்து, பேராயர் ஃபுல்டன் ஷீன் (Fulton Sheen) என்ற புகழ்பெற்ற இறையியலாளர், 'கிறிஸ்துவின் வாழ்வு' (Life of Christ) என்ற நூலில் கூறியுள்ள கருத்துக்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

'பேறுபெற்றோர்' ஒலித்த மலையும், கல்வாரி மலையும் ஒன்றோடொன்று தொடர்புடையது. முதல் மலையில் ஏறி, 'பேறுபெற்றோர்' என்று கூறியவர், அதன் விலையாக, இரண்டாவது மலையிலும் ஏறவேண்டியதாயிற்று. 'பேறுபெற்றோர்' என்று போதித்ததும், சிலுவையில் அறையப்பட்டதும், பகலும், இரவும் போல், ஒன்றையொன்று தொடர வேண்டியதாயிற்று. மலைமீது ஏறி, 'பேறுபெற்றோர்' என்று இயேசு பறைசாற்றிய வேளையில், தன் மரண தண்டனை தீர்ப்புக்கு அவரே கையொப்பமிட்டார். மனிதர்கள் எவ்விதம் மகிழ்வாய் வாழமுடியும் என்று அவர் கூறிய வார்த்தைகளின் எதிரொலியாக, மனித சதையைத் துளைத்து, ஆணிகளை அறைந்த சுத்தியல் ஒலி அமைந்தது.

மலைப்பொழிவை வழங்கிய மலைக்கும், மரணத்தைச் சந்தித்த கல்வாரி மலைக்கும் நடுவே, இயேசு, மற்றொரு மலையில் உருமாற்றம் அடைந்தார். மலைப்பொழிவின் நேரத்தில் எப்படி தன் கல்வாரி மலையைக் கண்டாரோ, அதேபோல், உருமாற்றம் பெற்றபோதும், கல்வாரி மலையை இயேசு கண்டார். அதைப்பற்றி மோசே, எலியா ஆகியோருடன் பேசவும் செய்தார்.

இறை அனுபவம் எவ்வளவுதான் அற்புதமானதாக இருந்தாலும், அந்த அனுபவத்திலேயே முழு வாழ்வையும் கழித்துவிட முடியாது என்பதை இயேசு உருமாறிய நிகழ்வின் கடைசிப்பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது, "நாம் இங்கேயே தங்கி விடலாம்" (லூக்கா 9:33) என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு "என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" (லூக்கா 9:35) என்று இறைவன் பதில் சொன்னார். அவ்விதம் செவிசாய்க்கும்போது, இறைமகன் இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள், மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுவார்.

கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கிவிட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறைவனைக் கண்ட, இறைவனைத் தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்லவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

மாற்றங்களைப் பற்றி சிந்திக்கும் வேளையில், தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழ் நாட்டில், மக்கள் வாழ்வை மையப்படுத்திய நல்ல மாற்றங்கள் உருவாகவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

"இவ்வுலகில் நீ காண விழையும் மாற்றமாக, நீ முதலில் மாறு" “Be the change that you wish to see in the world.” என்று சொன்னவர், மகாத்மா காந்தி. ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாக வேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால் அனைத்தும் மாறும், இறையன்பு வெறும் உணர்வாக இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாறவேண்டும் என்று, இயேசுவின் உருமாற்றம் நமக்குச் சொல்லித் தரும் பல பாடங்களை இத்தவக் காலத்தில் நாம் கற்றுக்கொள்ள முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.