2016-02-20 14:41:00

காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கர்தினால் டர்க்சன்


பிப்.20,2016. இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை, படைப்பின் கொடைகளால் நிறைந்துள்ளது, ஆனால் மனிதர் அக்கொடைகளை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாலும், அவற்றைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதாலும், அதன் எதிர்விளைவை ஏழைகள் அனுபவிக்கின்றனர் என்று, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மியாமி, புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் சமுதாயம் குறித்த முதல் அனைத்துலக கருத்தரங்கில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “Laudato si’ சுற்றுச்சூழல் திருமடல், சமுதாய மனச்சான்றுக்கு முன்வைத்துள்ள சவால்: ஒன்றிணைந்த சமுதாயமும் இயற்கையும்” என்ற தலைப்பில் உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள், அத்திருமடலில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ள மூன்று முக்கிய கருத்துக்கள் பற்றி எடுத்துரைத்தார்.

நம் பொதுவான இல்லத்திற்கு நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன? ஒருங்கிணைந்த  சுற்றுச்சூழல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இதில் திருஅவையின் பங்கு, மியாமி, புனித தாமஸ் பல்கலைக்கழகத்தின் பங்கு ஆகிய தலைப்புகளில் பேசிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நம் மனச்சான்றுகளை நன்றாக உருவாக்கி, நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.