2016-02-20 14:08:00

இறைஇரக்கத்தை வெளிப்படுத்துவதற்கு வாழ்வை அர்ப்பணியுங்கள்


பிப்.20,2016. அன்பு நெஞ்சங்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாவது யூபிலி சிறப்பு மறைக்கல்வியுரையைக் கேட்டு அவரின் ஆசிர் பெறுவதற்காக,  பிப்ரவரி 20, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட திருப்பயணிகள் கூடியிருந்தனர். உரோமையில் காலையில் சடசடவெனப் பொழியத் தொடங்கிய மழை, பயணிகளை இலேசாக அச்சுறுத்தி, சிறிது நேரத்தில் நின்றுவிட்டது. சூரியக் கதிர்களும் பளிச்சென வீசின. காலை பத்து மணிக்கு வளாகத்தில் திறந்த காரில் திருப்பயணிகள் மத்தியில் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைஇரக்கமும், அர்ப்பணமும் என்ற தலைப்பில் தனது சிறப்பு பொது மறைக்கல்வியுரையை வழங்கினார். அனைவருக்கும் காலை வணக்கம் என்று சொல்லி இவ்வுரையை இத்தாலியத்தில் தொடங்கிய திருத்தந்தை, இறைவனின் நன்மைத்தனம் மற்றும் அன்பின் பேருண்மையில் மிக ஆழமாக நாம் நுழைவதற்கு, இரக்கத்தின் யூபிலி ஆண்டு ஓர் உண்மையான வாய்ப்பாக உள்ளது என்று கூறி, தனது உரையை மேலும் தொடர்ந்தார்.

நம் ஆண்டவர் இயேசுவை இன்னும் அதிகமதிகமாக எப்போதும் அறியவும், நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிலும், இறைவனின் இரக்கத்தை தெளிவான முறையில் வெளிப்படுத்தவும் நம்மை ஆழமாக அர்ப்பணிப்பதற்கு, இந்த இரக்கத்தின் ஆண்டில், அதிலும் சிறப்பாக, இத்தவக்காலத்தில் திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவனின் படைப்பில் மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக, தம் திருமகனை அனுப்பியதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள, இறை அர்ப்பணத்திற்குப் பதில் அளிக்கும் வழியாக, இத்தகைய விசுவாசமுள்ள கிறிஸ்தவச் சான்று உள்ளது. ஏழைகள், நோயாளிகள், பாவிகள் மற்றும் தேவையில் இருக்கும் எல்லாருக்கும் நம்பிக்கையையும், மீட்பையும் வழங்குவதற்கு, இயேசுவில், இறைவன் தம்மையே அர்ப்பணித்திருக்கின்றார். இயேசு கிறிஸ்துவே, இறைவனின் இரக்கத்தின் உயிருள்ள வெளிப்பாடு. கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நம்பிக்கை மற்றும் ஒருமைப்பாட்டின் நற்செய்திக்குச் சான்று பகர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவில், இறைவன் நமக்கு வழங்கியுள்ள அர்ப்பணத்தை மேலும் மேலும் உணர்ந்து போற்றுவதற்கு இந்த யூபிலி ஆண்டு நமக்கு உதவுவதாக. அதன் வழியாக, எல்லார்மீதும் இறைவன் கொண்டுள்ள இரக்கமுள்ள அன்பு, நம் வாழ்வில் நம் வாழ்வில் பிரதிபலிக்கும்.

இவ்வாறு, இச்சனிக்கிழமை காலையில் தனது 2வது யூபிலி சிறப்பு பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும், அமைதியும் அனைவரையும் நிறைக்கட்டும் என வாழ்த்தினார். பிப்ரவரி 22, வருகிற திங்கள் திருத்தூதர் தூய பேதுருவின் தலைமைப் பீட விழா. தூய பேதுருவின் வழிவருபவர் மற்றும் திருப்பீடத்துடன் விசுவாசிகள் எல்லாரும் சிறப்பான ஒன்றிப்புக் கொள்ளும் நாள் இது. இவ்வாண்டு, இவ்விழா திருப்பீடத் தலைமையகத்தில் உள்ளவர்களுக்கு யூபிலி நாள். இந்நாளில் தனது உலகளாவிய மறைப்பணிக்காகச் செபிக்குமாறு திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார். அதோடு, திருஅவையின் அன்றாட வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு விசுவாசிகள் ஆற்றும் பணிக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சிறப்பு பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, இத்தாலிய தேசிய இரத்த தான கழகத்தின் உறுப்பினர்களைப் பாராட்டி ஊக்குவித்தார். பின்னர் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.