2016-02-19 15:07:00

துன்புறுவோரின் மாண்பைப் பாதுகாப்பதற்கு உழையுங்கள்


பிப்.19,2016. மனிதரின் மாண்பை, குறிப்பாக, துன்புறும் மனிதரின் மாண்பைப் பாதுகாப்பதற்கு, ஓய்வில்லாமல் உழையுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டில் மறைப்பணியாற்றும் தனது இயேசு சபை சகோதரர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மெக்சிகோ நாட்டுக்கான திருத்தூதுப் பயணத்தின்போது, மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்தில், மெக்சிகோ இயேசு சபையினரைச் சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ இளையோர் மற்றும் அவர்களின் ஆன்மீகப் பாரம்பரிய வளங்களையும் நினைவுபடுத்தினார்.

பிப்ரவரி 14, கடந்த ஞாயிறு மாலையில், Federico Gomez சிறார் மருத்துவமனை சந்திப்பை முடித்து திரும்பிய திருத்தந்தையை, திருப்பீடத் தூதரகத்தில் ஆறு இயேசு சபை அருள்பணியாளர்கள் சந்தித்து சிறிது நேரம் உரையாடினர்.

இச்சந்திப்பு குறித்து, “சகோதரரிடமிருந்து வாழ்த்து” என்று தலைப்பிட்டு, யூடியூப் காணொளிச் செய்தி ஒன்றை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளனர் மெக்சிகோ இயேசு சபையினர்.

மெக்சிகோ இளைய முகத்தைக் கொண்டுள்ளது, மெக்சிகோ துன்புறுகின்றது. ஆனால் மெக்சிகோ நாடு பெரியது என்று கூறியுள்ள திருத்தந்தை, மனித மாண்பு காக்கப்பட அயராது உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

1927ம் ஆண்டில் மெக்சிகோ நாட்டில் இடம்பெற்ற அருள்பணியாளர்க்கு எதிரான அடக்குமுறையில், மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட அருளாளர் Miguel Pro அவர்களின் திருப்பண்டத்தை, இச்சந்திப்பின்போது இயேசு சபையினர் திருத்தந்தையிடம் அளித்தனர். திருத்தந்தை தனது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களில் அப்பகுதி இயேசு சபையினரைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.