2016-02-19 14:59:00

திருத்தந்தையின் 2வது யூபிலி சிறப்பு மறைக்கல்வியுரை பிப்.20


பிப்.19,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாவது யூபிலி சிறப்பு மறைக்கல்வியுரை, பிப்ரவரி 20, இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், தங்களின் யூபிலி திருப்பயணத்தை மேற்கொள்ளும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட இத்தாலிய தேசிய இரத்த தான கூட்டமைப்பின்(FIDAS) உறுப்பினர்கள் இந்தப் பொது மறைக்கல்வியுரையில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருப்பயணம் பற்றிக் கூறிய, இக்கூட்டமைப்பின் தலைவர் Aldo Ozino Caligaris அவர்கள், இரண்டாயிரமாம் யூபிலி ஆண்டில், இக்கூட்டமைப்பினர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களைச் சந்தித்த பின்னர், இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளில், இரத்த தானம் வழங்கும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், இதில் இத்தாலி தன்னிறைவை எட்டியுள்ளது என்றும் கூறிய Caligaris அவர்கள், இந்த நிறைவைக் கொண்டாடுவதற்கு, இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டை, ஒரு வாய்ப்பாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.  

மெக்சிகோ நாட்டுக்கான திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து இவ்வியாழன் மாலையில் வத்திக்கான் திரும்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது களைப்பையும் பொருட்படுத்தாது இச்சனிக்கிழமை காலையில் யூபிலி பொது மறைக்கல்வியுரை ஆற்றவுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.