2016-02-19 15:31:00

இளையோர் விவிலியத்தை வாழ்வில் பயன்படுத்த வலியுறுத்தல்


பிப்.19,2016. கொரிய இளையோர் தங்களின் அன்றாட வாழ்வில் விவிலியப் போதனைகளை அதிகம் பயன்படுத்துமாறு இளையோர் கருத்தரங்கு ஒன்றில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தென் கொரியத் தலைநகர் செயோலில் நடைபெற்ற இளையோர் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறக்குறைய 450 இளையோரிடம் பேசிய, கொரிய திருப்பீடத் தூதர் பேராயர் Osvaldo Padilla அவர்கள், அடையாளப் பொருள்களை அல்லது அழகான வார்த்தைகளை வழிபடுவதால் அல்ல, ஆனால், விவிலியம் நமக்கு வெளிப்படுத்தும் போதனைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதாலேயே இறைவனை நாம் காண முடியும் என்று கூறினார்.

பிறரன்பு பற்றிப் பேசும்போது, நமக்கு அடுத்திருப்பவர்க்கு காட்டும் பிறரன்பு என்று நினைக்கின்றோம், ஆனால், நம்மை அன்புகூரும் கடவுளின் பிறரன்பால் முதலில் பலனடைபவர்கள் நாம்தான் என்பதே அதன் உண்மையான அர்த்தம் என்றும் கூறினார் பேராயர் Padilla.

கொரியா மற்றும் ஆசியாவில் திருஅவையின் வருங்காலம் என்று, கொரிய இளையோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நோக்குகிறார், இதனாலே, 2014ம் ஆண்டில் ஆசிய இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கு, திருத்தந்தை கொரியாவுக்கு வந்தார் என்றும் கூறினார் பேராயர் Padilla.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.