2016-02-18 15:18:00

ஹுவாரெஸ் நகர் இறுதித் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


பிப்.18,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, மனிதரின் வாழ்வு இறைவனின் மகிமை என்று, இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஐரீனியஸ் எழுதியுள்ளார். தன் மக்கள் தழைத்து வளர்வதைக் காட்டிலும் தந்தைக்கு வேறு எதுவும் பெருமை அல்ல. நாம் கேட்ட முதல் வாசகம் இதனைச் சுட்டிக்காட்டுகிறது. நினிவே மாநகர், வன்முறையாலும், அநீதியாலும் தன்னைத் தானே அழித்துக் கொண்டு வந்தது. அவ்வேளையில், ஆண்டவர் யோனாவுக்குத் தோன்றி, "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்' என்று சொல்" (யோனா 3:4) என்று அவரைப் பணித்தார். அரசன், மக்கள், விலங்குகள் அனைத்தும் வாழும் முறை சரியல்ல என்பதை அவர்கள் காணும்படி செய். தங்கள் சுயநலத்தால் மயக்கமுற்று கிடக்கும் இம்மக்களை விழித்தெழச் செய் என்று இறைவாக்கினர் யோனாவை இறைவன் அனுப்பினார்.

இன்று நாம் கேட்ட இறைவார்த்தையில் இறைவனின் இரக்கத்தையும் காண்கிறோம். மனிதருக்குள் புதைந்து, மரத்துப் போயிருக்கும் நன்மைத் தனத்தை, இரக்கம் தட்டியெழுப்புகிறது. தீமையை, அழிவை, ஊடுருவிச் சென்று, மாற்றங்களை உருவாக்குகிறது இரக்கம்.

அரசர் இறைவாக்கினர் யோனாவுக்கு செவிமடுத்து, அனைத்து மக்களும் நோன்பு இருக்குமாறு கட்டளையிட்டார். கடவுளின் கருணை, மனங்களில் நுழைந்து மாற்றங்களைக் கொணர்ந்தது.

மக்கள் தங்கள் நிலையை உணர்வதற்கு, தங்களையே தெளிவாகக் காண்பதற்கு இறைவாக்கினர் யோனா உதவினார். தங்கள் நிலையை உணர்ந்து, கண்ணீர் வடித்து, மனமாற்றம் பெற்றனர், இம்மக்கள்.

இந்த இரக்கத்தின் ஆண்டில், உங்களோடு இணைந்து நான் இரு வரங்களுக்காகச் செபிக்கிறேன். கண்ணீர், மற்றும் மனமாற்றம் என்ற இரு கொடைகளுக்காக இறைவனிடம் கெஞ்சுகிறேன்.

ஏனைய எல்லை நகரங்களைப் போல, ஹுவாரெஸ் நகரிலும் 'மறுபக்கம் செல்வதற்காக' குடியேற்றதாரர்கள் ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்றனர். இந்தப் பயணத்தின் ஒவ்வோர் அடியும் அநீதியால் கனத்துப் போயுள்ளது.

புலம் பெயர்தல் இன்று உலகளாவிய ஓர் பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்தப் பிரச்சனையை, எண்ணிக்கை என்ற புள்ளிவிவரம் கொண்டு அளக்கலாம். அல்லது, ஒவ்வொருவரின் பெயர், குடும்பம், அவர்களின் துயரக் கதைகள், என்று அளக்கலாம். வறுமை, வன்முறை, மனித வர்த்தகம் என்ற வலைகளில் சிக்கிய நமது சகோதர, சகோதரிகள், இவர்கள். இந்த வலைகளிலிருந்து தப்பித்துச் செல்ல இவர்கள் முயலும்போது, இன்னும் சிக்கலான வலைகளில் வீழ்கின்றனர்.

மனமாற்றம், கண்ணீர் என்ற இரு கொடைகளுக்காக நாம் இறைவனிடம் இணைந்து வேண்டுவோம். நினிவே மக்கள் கொண்டிருந்த திறந்த மனம் நம்மிடமும் உருவாகவேண்டும் என்று மன்றாடுவோம்.

புலம்பெயர்ந்த மக்களுக்காக உழைக்கும் பல்வேறு அமைப்பினரை நான் அறிவேன். தங்கள் வாழ்வைப் பணயம் வைத்து உழைக்கும், அருள் பணியாளர், துறவியர், பொது நிலையினர், இளையோர் பலர் உண்டு. இவர்கள் தங்கள் வாழ்வால், இரக்கத்தின் இறைவாக்கினர்களாக விளங்குகின்றனர். திருஅவையின் இதயத் துடிப்பாகவும், உதவிசெய்யச் செல்லும் கால்களாகவும் இவர்கள் பணியாற்றுகின்றனர்.

மனமாற்றத்தின், மீட்பின், இரக்கத்தின் இக்காலத்தில், துன்புறும் மனுக்குலத்திற்காக நாம் இணைந்து செபிப்போம்: "இறைவா! உமது பேரன்புக்கேற்ப எமக்கு இரங்கும்; எம் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். தூயதோர் உள்ளத்தை எமக்குள்ளே படைத்தருளும்" (காண்க. திருப்பாடல் 51)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.