2016-02-18 15:38:00

விடைபெறுதல் : நம்பிக்கை ஒளி விளக்குகளைப் பார்த்தேன்


பிப்.18,2016. மெக்சிகோவில் என் திருப்பயணம் நிறைவேற உதவிய இறைவனுக்கு நன்றி கூறும் நேரமிது. இதற்குரிய ஏற்பாடுகளைக் கவனித்த அனைவருக்கும் நன்றியை உரைக்காமல் செல்ல விரும்பவில்லை. நாட்டின் கதவுகளையும், இதயக் கதவுகளையும் எனக்காகத் திறந்த மெக்சிகோ மக்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். மெக்சிகோவின் எழுத்தாளர் Octavio Pazன் ஒரு கவிதையை இங்கு நினைவு கூர்கிறேன்.

'நான் ஒரு மனிதன். என் வாழ்வு சிறிது காலமே.

இரவோ, பரந்து அகன்றதாக உள்ளது.

ஆனால், நான் நிமிர்ந்து பார்க்கிறேன்,

விண்மீன்கள் எழுதிக்கொண்டிருக்கின்றன.

அதனை உள்வாங்காமலேயே புரிந்துகொள்கிறேன்,

நானும் எழுதப்படுகிறேன் என்று.

இந்த நேரத்தில் யாரோ ஒருவர் என்னை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்.'

கவிதையின் இந்த அழகான வார்த்தைகளை எடுக்கும் நான், நம் பெயரை உச்சரிப்பவர் மற்றும் நம் பாதையை வகுப்பவர் இறைவனே என்றும், அவரின் பிரசன்னம் அனைத்து மக்களிலும், குறிப்பாக, மெக்சிகோவின் ஏழைகள் மற்றும் உதவித் தேவைப்படுவோரில் காணப்படுகின்றது என்றும் துணிவுடன் கூறுகின்றேன்.

இரவு பரந்து, அகன்றதாகவும், இருள் நிரம்பியதாகவும் இருக்கலாம், ஆனால், இந்நாட்களில், மெக்சிகோ மக்களில் நம்பிக்கையைப் பறைசாற்றும் ஒளி விளக்குகளைப் பார்த்தேன். அவர்களின் சாட்சியங்களில், இறைப்பிரசன்னத்தைக் கண்டேன். மெக்சிகோ சமுதாயம் இருளில் விடப்படாது. அவர்களே நாளைய இறைவாக்கினர்கள், அவர்களே புது விடியலின் அடையாளங்கள்.

குவாதாலூப்பே அன்னை மரியா, உங்கள் மண்ணில் தொடர்ந்து நடைபோட்டு, நீங்களனைவரும் இரக்கம் மற்றும் ஒப்புரவின் மறைப்பணியாளர்களாகவும், சாட்சிகளாகவும் செயல்பட உதவுவாராக.

மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.