2016-02-18 15:16:00

இது இரக்கத்தின் காலம்:ஆசைகளிலிருந்து விடுபட ஆசைப்பட்டால்...


அரசர் ஒருவர் அமைதியே இல்லாமல் பல நாள்கள் துன்பப்பட்டார். பல பல முயற்சிகள் செய்து பார்த்தார். மனதில் அமைதி மட்டும் கிடைக்கவில்லை. அதனால் வேதங்களைக் கற்றுத்தேர்ந்த ஒரு துறவியைத் தேடிப் போனார். ஐயா, நான், எனது துன்பங்களிலிருந்து விடுபடனும், அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கு அந்தத் துறவி, நான் ஒரு வழி சொல்கிறேன், உம் அரசில், போதும் என்ற மனதோடு வாழ்கின்ற ஒருவருடைய சட்டையை வாங்கி நீர் போட்டுக்கொள்ள வேண்டும், அப்படிப் போட்டுக்கொண்டால், அரசே, உங்கள் துன்பம் தீரும் என்று சொல்லியனுப்பினார். அரசரும் மகிழ்வுடன் திரும்பினார். அரண்மனையிலிருந்த அத்தனை பணியாட்களையும்  அனுப்பி, நாட்டில், போதும் என்ற மனநிலையோடு வாழ்கின்ற ஒருவருடைய சட்டையை வாங்கி வருமாறு கட்டளையிட்டார். அவர்களும் பல இடங்களில் தேடி ஒருவரைக் கண்டுபிடித்தனர். ஆனால், அந்த மனிதரிடம் சட்டை இல்லை, இடுப்பில் கட்டியிருந்த ஒரு துண்டே போதும் என்ற மனநிலையோடு அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அரண்மனை ஆட்களும் அரசரிடம் சென்று அந்த மனிதர் பற்றிச் சொன்னார்கள். அப்போது அரசர், சட்டை இருந்தால்தானே அதனை வாங்கிப் போட்டுக்கொள்ள முடியும். அதனால்தான் அந்தத் துறவி அப்படிச் சொன்னார் என்பதைப் புரிந்துகொண்டார். ஆம். வாழ்வில் ஆசைகளை ஒழிக்க வேண்டுமென்பதையே ஓர் ஆசையாகக் கொள்வதே தவறு. ஆசைகளை ஒழிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், புதிதாகத் துன்பங்கள்தான் வந்து சேரும். புதிதாக மேலும் ஓர் ஆசையும் தலைதூக்கும். இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.