2016-02-17 12:12:00

மெக்சிகோ இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை


பிப்.17,2016. அன்புக்குரிய இளைய நண்பர்களே, மெக்சிகோ மக்களின் துடிப்புள்ள வாழ்க்கை, மகிழ்வு, கொண்டாட்ட உணர்வு ஆகியவற்றை நான் இந்நாட்டில் காண முடிந்தது. இந்நாட்டு அரசுத் தலைவரிடம் நான் சொன்னதை மீண்டும் சொல்ல விழைகிறேன். மெக்சிகோவின் மிகப் பெரும் கொடை, அதன் இளையோரே. ஆம், நீங்கள் இந்நாட்டின் நம்பிக்கை மட்டுமல்ல, நீங்கள்தான் இந்நாட்டின் செல்வம்.

நீங்கள் உங்கள் மட்டில் மதிப்புக் கொள்ளவில்லை எனில், உங்கள் வாழ்வு, வரலாறு, உழைப்பு ஆகியவை உயர்ந்தவை என்பதை உணராவிடில், உங்களால் எதிர்காலத்தை நம்பிக்கையோடு அணுகமுடியாது. நம்பிக்கை நமக்குள்ளிருந்து பிறக்கவேண்டும்.

நம்மை நாமே மதிக்காமல், நாம் இரண்டாம் தரம், நம்மால் யாருக்கும் பயனில்லை என்று எண்ணுவதே, நம்பிக்கையின் மிகப் பெரும் ஆபத்து.

இத்தகைய எண்ணங்கள் நம்மைக் கொன்று, நசுக்கி, பெரும் துன்பத்தைத் தரும்.

உள்ளுக்குள் உண்மையான மதிப்பு இல்லாமல், வகை வகையாய் உடுத்துவதில், பணம் வைத்திருப்பதில் நம் மதிப்பு உள்ளது என்று எண்ணுவது மிகப் பெரும் ஆபத்து. பணத்தைக் கொண்டு, அன்பு உட்பட, அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று எண்ணுவதும் பெரும் ஆபத்து.

நீங்கள்தான் மெக்சிகோ நாட்டிற்கும், மெக்சிகோ திருஅவைக்கும் செல்வமாக விளங்குகிறீர்கள். போதைப்பொருள் வர்த்தகம், போதைப்பொருள் பயன்பாடு, குற்றம் புரியும் அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு உங்கள் நண்பர்கள் பலியாகும்போது, உங்கள் உண்மை மதிப்பை உணர்வது எளிதல்ல. சரியான வேலைவாய்ப்பு இன்றி நீங்கள் தவிக்கும்போது, நீங்கள் இந்நாட்டின் செல்வங்கள் என்பதை நம்புவது எளிதல்ல.

தங்கள் சுயநலனுக்கென உங்கள் இளமையை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தும்போது, இந்த நாட்டின் மதிப்பை உணர்வது எளிதல்ல. இருப்பினும், நான் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் சொல்வேன், நீங்கள் மெக்சிகோவின் செல்வங்கள்.

நான் அனைத்தும் அறிந்த உத்தமன் என்பதால் இதைச் சொல்லவில்லை, மாறாக, உங்களைப் போல நானும் இயேசுவில் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறேன். என்னிடம் உள்ள மிகச் சிறந்தவற்றை வெளிக்கொணரும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு என்ற நம்பிக்கையில் நான் இவ்வாறு கூறுகிறேன். அவரோடு கரம் கோர்த்து நடக்கும்போது, நம்மால் முன்னேறிச் செல்லமுடியும்.

சாவுக்கும், அழிவுக்கும் வழிகாட்டும் போதைப்பொருள் வர்த்தகர்களை நம்பிச் செல்வதைவிட, இயேசுவை நம்பிச் செல்லலாம். இந்நாட்டில் உள்ள இளையோர், வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு, வறுமையில் மட்டுமே வாழமுடியும் என்று சொல்லப்படும் பொய்களை நம்பாமல், இயேசுவை நம்பிச் செல்லலாம்.

நம்பிக்கை தரும் வார்த்தையைச் சொல்லுமாறு என்னிடம் நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள். நான் தரக்கூடிய அந்த ஒரு வார்த்தை, இயேசு கிறிஸ்து. உங்களைச் சூழ்ந்து, நெருக்கி, நசுக்கும் சூழல்களில், இயேசுவின் கரங்களை கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள். இவ்விதம் செய்வதால், நீங்கள் ஒரு விற்பனைப் பொருளாக மாறுவதிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

இவ்விதம் செய்வதால், உங்கள் 'பாக்கெட்டுகள்' பணத்தால் நிரம்பாது; உங்கள் வீட்டுக்கு முன், விலையுயர்ந்த கார் நிற்காது. ஆனால், உங்கள் உள்ளம் நிறைந்திருக்கும், அந்த நிறைவை உங்களிடமிருந்து யாராலும் எடுத்துவிட முடியாது.

இந்த மண்ணில் பிறந்த ஹுவான் தியேகோவை (Juan Diego) அழைத்ததைப் போல, உங்களையும் ஆண்டவர் அழைக்கிறார். ஒரு திருத்தலத்தைக் கட்டுவதற்கு அழைக்கிறார். ஒரு கட்டடத்தை அல்ல, மாறாக ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அவர் உங்களை அழைக்கிறார். ஒரு சமுதாயத்தை, குடும்பத்தைக் கட்டியெழுப்புவது, நம்மை பயமுறுத்தும் அனைத்து அச்சங்களையும் வெல்வதற்கு ஒரு சிறந்த மாற்று மருந்து.

நீங்கள் இந்நாட்டின் செல்வங்கள். இதை நீங்கள் சந்தேகப்பட்டால், கிறிஸ்துவை ஏறெடுத்துப் பாருங்கள். உங்களைப் பயனற்றவர்கள் என்று சொல்லி, மற்றவர்களின் பேராசைகளுக்கு உங்களைப் பலியாக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கக் கூடியவர், இயேசு ஒருவரே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.