2016-02-16 13:06:00

மெக்சிகோ குடும்பங்களுடன் திருத்தந்தையின் பகிர்வு


பிப்.16,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, சியாப்பநேக்கா (Chiapaneca) மண்ணில் இருப்பது, நல்லுணர்வுகளைத் தருகின்றது. உங்கள் இல்லங்களின் கதவுகளைத் திறந்து, உங்கள் அப்பத்தில் எங்களுக்கும் பங்களித்ததற்காக நன்றி சொல்கிறேன். உங்கள் மகிழ்வு, நம்பிக்கை, கடின உழைப்பு, துயரம், தோல்வி அனைத்தையும் இந்த அப்பம் நினைவுபடுத்துகிறது. உங்கள் குடும்பங்களோடு இணைந்து உணவருந்த எனக்கு அனுமதி தந்ததற்காக நான் நன்றிகூறுகிறேன்.

மானுவேல், (Manuel) நீங்கள் வழங்கிய சாட்சியப் பகிர்விற்காகவும், குறிப்பாக, உங்கள் எடுத்துக்காட்டான வாழ்வுக்காகவும் நன்றி. Echarle ganas, அதாவது, "முழு உள்ளத்தோடு ஈடுபட்டேன்" என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள், எனக்கு மிகவும் பிடித்திருந்தன. உங்கள் குடும்பம், சமுதாயம், அனைத்திலும் முழு உள்ளத்தோடு நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள். இதைத்தான், தூய ஆவியார், நம்மிடையே எப்போதும் செய்ய விழைகிறார். அவர் நமக்கு புது உள்ளத்தை வழங்கி, நம் குடும்பங்களையும், சமுதாயத்தையும் கட்டியெழுப்பும் கனவுகளை விதைக்கிறார், சவால்களைச் சந்திக்க உறுதி அளிக்கிறார்.

தந்தையாம் இறைவன், முழு உள்ளத்தோடு மனிதர்கள் வாழ்வில் ஈடுபட்டார். ஏதேன் தோட்டத்தில் அனைத்தையும் இழந்துவிட்டதாக மனிதர்கள் உணர்ந்தபோது, அந்த இளம் தம்பதியருக்கு புது உள்ளத்தைத் தந்து, அனைத்தும் அழிந்துபோகவில்லை என்ற நம்பிக்கையைத் தந்தார். இஸ்ரயேல் மக்களின் பயணத்தில் அவர்களுக்கு மீண்டும், மீண்டும் புது உள்ளத்தைத் தந்து, உற்சாகப்படுத்தினார். காலம் நிறைவேறிய வேளையில், தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பியபோது, தந்தையாம் இறைவன் தன் முழு உள்ளத்தோடும் அதைச் செய்தார்.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தந்தையாம் இறைவன் முழு உள்ளத்தோடு ஈடுபட்டிருப்பதை அனுபவித்துள்ளோம். இது ஏன்? என்று நாம் கேட்கலாம். ஏனெனில், அவரால் வேறு எவ்வகையிலும் செயலாற்ற இயலாது. அவர் பெயர் அன்பு என்பதால், அவர் பெயர், தன்னையே வழங்குதல், இரக்கம் என்பதால், நம் வாழ்வில் மிகச் சிறந்தவற்றை வழங்கமட்டுமே அவருக்குத் தெரியும்.

அவர் முழு உள்ளத்தோடு வழங்கிய மகன், இவ்வுலகில் தன்னையே முழுவதும் வழங்கி, இறையரசை நிறுவினார். கிறிஸ்து உருவாக்கிய புதிய மனநிலையில் நாமும் பங்கேற்க இந்த அரசு நம்மை அழைக்கிறது. நம்மிடம் உள்ள காயங்களை ஆற்றி, மீண்டும், மீண்டும், அதாவது, எழுபது முறை ஏழு முறை புதிதாகத் தொடங்குவதற்கு அவர் நம்மை அழைக்கிறார்.

மனம் தளர்ந்து, கொள்கையேதும் இன்றி, தவறானப் பாதையில்  செல்லும் இளையோருக்கு செபிக்கும்படி, மானுவேல், நீங்கள் என்னிடம் கேட்டுக் கொண்டீர். பேசுவதற்கு யாரும் இன்றி, தனிமையை உணர்வதாலேயே இளையோர் இவ்விதம் உள்ளனர் என்றும் நீர் சரியாகச் சொன்னீர்.

சாட்சியப் பகிர்வினைத் தந்த பெயாத்ரிச்சே (Beatrice) அவர்களும் இதையேச் சொன்னார். உறுதியற்ற நிலை, போதுமானவை இல்லாதச் சூழல் ஆகியவை நம் உடலிலும், உள்ளத்திலும் தாக்கங்களை உருவாக்கும் ஆபத்து கொண்டவை.

இந்த ஆபத்திலிருந்து நம்மைக் காக்க பல்வேறு வழிகள் உள்ளன. சட்டங்கள் வழியே, அனைவருக்கும் அனைத்தும் சரி சமமாகக் கிடைக்கும் வழிகளை அமைக்கலாம்.

மற்றொரு வழியை, ஹும்பெர்த்தோ (Humberto), கிளவுதியா (Claudia) இருவரும், தங்கள் சாட்சியப் பகிர்வில் கூறினர். அயலவருக்கு ஆற்றும் பணிகள் வழியே இறை அன்பை பறைசாற்றும்போது, உறுதியற்ற நிலையை வெல்ல முடியும் என்று அவர்கள் சொன்னது மற்றொரு வழி.

இன்று, குடும்பங்கள் பல்வேறு திசைகளிலிருந்து சவால்களைச் சந்திக்கின்றன. குடும்ப வாழ்வு எளிதானது அல்ல. ஆனால் நான் அடிக்கடி சொல்வதைப் போல், காயப்படுவோம் என்ற அச்சத்தால், அன்பு செலுத்தாமல் தனிமையில் வாடுவதைவிட, அன்பு செலுத்தி காயப்படும் ஒரு குடும்பம் எப்போதும் சிறந்தது.

உள்ளே இருக்கும் களைப்பை மறைக்க செயற்கையாக முகப்பூச்சுக்களைப் போட்டுக்கொள்ளும் முகங்களை விட, மற்றவர்களுக்குக் கொடுப்பதால், களைப்படைந்துள்ள முகங்கள் ஒரு குடும்பத்தில் இருப்பது சிறந்தது.

உங்களுக்காக செபிக்கும்படி என்னிடம் கேட்டீர்கள்; நான் உங்களோடு சேர்ந்து செபிக்க விழைகிறேன். மெக்சிகோ நாட்டு மக்களுக்கு ஒரு கூடுதல் சிறப்பு உண்டு. உங்களுக்கு குவாதலூப்பே அன்னை இருக்கிறார். அவரது பரிந்துரையால், உங்கள் உறுதியற்ற சூழல் நீங்கி, உங்கள் கனவுகள் நனவாகும் வாய்ப்பு உறுதியாக உள்ளது. நமது குடும்பங்களையும், நமது எதிர்காலத்தையும் எப்போதும் காப்பதற்கு அந்த அன்னை தயாராக இருக்கிறார். இந்த ஒரு காரணத்திற்காக, நாம் அனைவரும் இணைந்து 'அருள் நிறை மரியே' என்ற செபத்தை சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.