2016-02-16 12:47:00

பழங்குடியினருக்கு ஆற்றிய திருப்பலியில் திருத்தந்தை மறையுரை


பிப்.16,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, Li smantal Kajvaltike toj lek, அதாவது, ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.

நாம் இப்போது கேட்ட திருப்பாடல் இவ்வாறு ஆரம்பமாகிறது. நிறைவான திருச்சட்டம் அளிக்கக்கூடிய அனைத்து நன்மைகளையும், திருப்பாடல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் மக்கள் அனைவரும், சுதந்திரமாக வாழ்வதற்கு, திருச்சட்டம் உதவியாக இருக்கும். இம்மக்கள் மேற்கொள்ளும் பயணத்தில், இச்சட்டம், ஒளி விளக்காக அமையும். பாரவோனின் அடிமைத் தளையில் சிக்கியிருந்த இம்மக்களைக் கண்டு, "போதும்! இனியும் இவ்வாறு வேண்டாம்! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்" (காண்க. வி.ப. 3:9) என்று இறைவன் சொன்னார். இங்கு இறைவனின் உண்மையான முகத்தைக் காண்கிறோம். தன் பிள்ளைகள் துன்புறுவதையும், தவறாக நடத்தப்படுவதையும் கண்டு துன்புறும் ஒரு தந்தையின் முகத்தைக் காண்கிறோம். கடவுளின் வார்த்தை, அவரது சட்டம், சுதந்திரம், ஒளி, ஞானம், மகிழ்வு இவற்றிற்கு அடையாளமாக அமைகின்றது.

இதே எண்ணங்களை, இந்த மண்ணில் உருவான ‘போப்போல் வு’ (Popol Vuh) என்ற மிகப் பழமையான பாரம்பரியம் பயன்படுத்திய செபத்தில் காண்கிறோம்: "அனைத்து மக்களினத்தின் மீதும் உதயம் எழுகிறது. ஞாயிறின் ஒளியால், பூமியின் முகம் உடனே குணமானது." (33) வரலாற்றின் காரிருள் நேரங்களில் நடந்து சென்றவர்கள் மீது ஞாயிறு எழுந்தது.

இந்த பாரம்பரிய செபத்தில், மனிதரின் சுதந்திர வேட்கை வெளிப்படுகிறது. உடன்பிறந்தோர் உணர்வைக் கொண்டு, ஊழலைக் களையவும், ஒற்றுமையால் அநீதியை வெல்லவும் மனிதரின் மனதில் ஆழ்ந்த தாகம் உள்ளது. இத்தாகத்தை நமது தந்தை நமக்குள் உருவாக்கியுள்ளார்; இத்தாகத்தை தணிக்க, தன் மகனையும் அனுப்பியுள்ளார். இறை மகன், வழியாக, உண்மையாக, வாழ்வாக மாறி, நம்மைச் சூழ்ந்த இருளகற்றி, விடியலாகப் புலர்கிறார்.

இந்தத் தாகத்தை மௌனமாக்க, சக்தியிழந்ததாக மாற்ற, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், கனவுகள் நிறைவேறாது என்றும் சொல்லப்பட்டன.

இத்தகைய முயற்சிகளைக் கண்டு, படைப்பு தன் மறுப்பை வெளிப்படுத்தியுள்ளது: "இறைவன் வழங்கிய கொடைகளை, பொறுப்பின்றி பயன்படுத்துவதைக் கண்டு, படைப்பு கதறி அழுகிறது. படைப்பை எப்படியும் பயன்படுத்தலாம் என்ற மமதையில் நாம் படைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறோம். பாவத்தின் விளைவாக, நம் உள்ளங்களில் குடியிருக்கும் வன்முறை, நிலம், நீர், காற்று என்ற அனைத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது" (இறைவா உமக்கே புகழ் 2)

சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் ஆபத்தைக் கண்டும் நாம் மௌனம் காக்க முடியாது. இத்தகையதொருச் சூழலில், இந்நாட்டின் முன்னோர் நமக்கு அதிகம் சொல்லித்தர முடியும். இயற்கையோடு எவ்வாறு ஒருங்கிணைந்து வாழ்வது, மக்கள் அனைவரோடும் இயற்கைச் செல்வங்களை எவ்வாறு பகிர்வது என்ற பாடங்களைக் கற்றுக் கொள்ளமுடியும்.

முன்னோரின் இந்த எண்ணங்களையும், கலாச்சாரத்தையும் மிகத் தாழ்வானவை என்று எடைபோட்டவர்கள், உங்கள் மக்களை, சமுதாயத்திலிருந்தும், வரலாற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்துவிட்டனர். பணம், அதிகாரம் இவற்றின் ஆதிக்கத்தால், நிலைதடுமாறி வாழும் இவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, நம் முன்னோரிடம் மன்னிப்பு கேட்பது அவசியம். தூக்கியெறியும் கலாச்சாரத்தில் சிக்குண்டிருக்கும் இவ்வுலகிற்கு நீங்கள் தேவை.

கலாச்சாரப் பாரம்பரியங்களை அடக்கி, ஒடுக்கி, ஒரே சிந்தனை கொண்ட உலகை உருவாக்கும் இன்றைய கலாச்சாரத்திற்கு முன், நம் இளையோர், தங்கள் முன்னோர்களின் ஞானத்தை உறுதியாகப் பின்பற்றவேண்டும். வசதிகளைப் பெருக்கிக்கொண்டுள்ள இன்றைய உலகம், நன்றி என்ற உணர்வின் மதிப்பை உணரவேண்டும்.

படைத்தவர், நம்மை என்றும் கைவிடுவதில்லை; தன் அன்புத் திட்டத்தைக் குறித்து அவர் எப்போதும் வருந்துவதில்லை (இறைவா உமக்கே புகழ் 13). இவ்வுலகின் மிகச் சிறியோருக்கு நாம் ஆற்றும் ஒவ்வொரு செயல் வடிவிலும், இயேசு மீண்டும், மீண்டும் இறந்து, உயிர்க்கிறார். அந்த மரணத்திற்கும், உயிர்ப்பிற்கும் நாம் சாட்சிகளாக இருப்போம். Li smantal Kajvaltike toj lek, அதாவது, ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது என்ற வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.