2016-02-16 15:14:00

துக்ஸ்லா குட்டியெரெஸ் நகரில் குடும்பங்கள் சந்திப்பு


பிப்.16,2016. மெக்சிகோவின், துக்ஸ்லா குட்டியெரெஸ் நகரின் விக்டர் மானுவேல் ரெய்னா அரங்கத்திற்கு வெளியே காத்திருந்த மக்கள் வெள்ளத்தின் மத்தியில் முதலில் திறந்த காரில் சென்ற பின்னர், அந்த அரங்கத்திலும் திறந்த காரில் வலம் வந்தார் திருத்தந்தை. அங்கு அந்நகர் ஆளுனர் திருத்தந்தைக்கு நகரின் சாவியை அளித்தார். அந்த அரங்கத்தில் நடந்த குடும்பத்தினர் சந்திப்பில், முதலில், திருத்தந்தையிடம், சக்கர நாற்காலியில் இருந்த இளம் மாற்றுத்திறனாளி மானுவேல், திருமண முறிவுபெற்று மீண்டும் திருமணமான ஒரு தம்பதியர், தனது குடும்பத்திற்கு அடிப்படை வசதிகளைப் பெறத் துன்புறும் ஒரு குடும்பத்தினர், கட்டாயக் கருக்கலைப்பு செய்ய மறுத்த திருமணமாகாத ஒரு தாய் என்று, பல்வேறு குடும்பச் சூழல்களில் வாழும் நான்கு பேர் தங்கள் வாழ்வு பற்றிப் பகிர்ந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளி மானுவேல், தனது வாழ்வுக்கும், தனது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு சேவையாற்றி வருகிறார் என்பதை தனது உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, நம் மத்தியில் தூய ஆவியார் எப்போதும் ஆற்ற விரும்புவது இதுவே என்றும் கூறினார். இச்சந்திப்பை முடித்து, துக்ஸலா நகர் விமான நிலையம் சென்று, மெக்சிகோ நகருக்குச் சென்றார் திருத்தந்தை. அந்நகர் திருப்பீடத் தூதரகத்தின் வாயிலில் காரைவிட்டு இறங்கி, அங்கு காத்திருந்த நோயாளிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து விசுவாசிகளையும் அரவணைத்து ஆசிர்வதித்தார். நம்மை அன்னை மரியாவின் அரவணைப்பில் அர்ப்பணிப்போம், எனக்காகச் செபிக்க மறவாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. பின்னர் திருப்பீடத் தூதரகத்தினுள் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இத்திங்கள் தின பயண நிகழ்வுகள் நிறைவடைந்தன. மெக்சிகோ திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, வருகிற வியாழன் மாலை 3.15 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.