2016-02-16 14:45:00

திருத்தந்தை சென்ற துக்ஸ்லா குட்டியெரெஸ் நகரம்


பிப்.16,2016. “இந்த நம் பூமிக்கோளத்தில் மிகவும் தரக்குறைவாக நடத்தப்படுபவர்கள் ஏழைகள். பெரும் சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாம், இந்தப் பூமியில் எல்லாரும் நலமாக இருக்கின்றார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்க முடியாது”; “ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும், சுதந்திரமாக வாழ்வதற்கு ஆவல் இருக்கின்றது. இத்தகைய ஓர் இடத்தில், உடன்பிறப்பு உணர்விலும், தோழமையிலும் வாழ இயலும்”; அன்பு நெஞ்சங்களே, இத்திங்களன்று பிரசுரிக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த இரண்டு டுவிட்டர் செய்திகளை வைத்தே, திருத்தந்தையின் இத்திங்கள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் என்னவென்று நாம் அறிந்து கொள்ளலாம். பிப்ரவரி 16, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிக்கோ நாட்டில், போதைப்பொருள் வர்த்தகத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள Michoacán மாநிலத் தலைநகர் மொரேலியாவுக்குச் சென்றார். இந்நகரில் அருள்பணியாளர்கள், குருத்துவ மாணவர்கள், அருள்சகோதரிகள் ஆகியோர்க்குத் திருப்பலி, மொரேலியா பேராலயம் செல்லுதல், இளையோரைச் சந்தித்தல் ஆகிய மூன்று நிகழ்வுகள் பயணத் திட்டத்தில் உள்ளன.

மெக்சிகோ நாட்டுக்கான ஆறு நாள் கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தின் நான்காவது நாளாகிய இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை ஏழு மணிக்கு, மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தூரம், எளிமையான வெள்ளை நிற ஃபியட் காரில் பெனித்தோ ஹூவாரெஸ் பன்னாட்டு விமான நிலையம் சென்று, அங்கிருந்து Tuxtla Gutiérrez நகருக்குப் பயணமானார் திருத்தந்தை. ஒரு மணி நாற்பது நிமிடங்கள் பயணம் செய்து Tuxtla நகரைச் சென்றடைந்தார் திருத்தந்தை. மெக்சிகோ நாட்டின், ஷியாப்பாஸ்(Chiapas) தென்கிழக்கு மாநிலத்தின் தலைநகரான Tuxtla நகரம், அம்மாநிலத்தின் ஒரே மாநகரம் மற்றும் அதிகமான மக்கள் வாழ்கின்ற வளர்ச்சியடைந்த நகரமுமாகும். கடந்த நாற்பது ஆண்டுகளில் மெக்சிகோவில் வெகு வேகமாக வளர்ச்சியடைந்த இடங்களில் ஒன்றாகிய இந்நகரம், சுற்றுலாத் தலமாக இல்லாவிடினும், மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு உதவியாக, போக்குவரத்து வசதிகளை அதிகமாகக் கொண்டுள்ளது. கி.பி.800ம் ஆண்டில் இந்நாட்டின் தேசிய மாமனிதராகப் போற்றப்பட்ட ஹூவாக்கின் மிகுவேல் குட்டியெரெஸ் என்பவரின் பெயரால் இந்நகர் அழைக்கப்படுகின்றது. Tuxtla Gutiérrez நகரின் விமான நிலையத்திலிருந்து உடனடியாக ஹெலிகாப்டரில் ஏறி, 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, San Cristóbal de las Casas நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நகருக்குச் சென்ற திருத்தந்தைக்கு மலர்க் கிரீடமும், மலர்மாலையும் அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.