2016-02-16 14:57:00

சான் கிறிஸ்டோபல் நகரில் திருத்தந்தை திருப்பலி


பிப்.16,2017. ஷியாப்பாஸ் மாநிலத்தின் தலைநகராக 1892ம் ஆண்டுவரை விளங்கிய San Cristóbal de las Casas நகரம், இன்றும் அம்மாநிலத்தின் கலாச்சாரத் தலைநகராக, குறிப்பாக, மாயா இனக் கலாச்சார மையமாக விளங்குகின்றது. மலைகளும், குன்றுகளும் நிறைந்த ஷியாப்பாஸ் மாநிலத்தில், San Cristóbal de las Casas நகரம், குன்றுகளால் சூழப்பட்டு சிறிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நகருக்குச் சென்ற திருத்தந்தைக்கு மலர்க் கிரீடமும், மலர்மாலையும் அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.  இந்நகர் மாநகராட்சி விளையாட்டுத் திடலில், பலவண்ண ஆடைகளில் ஆடல் பாடல்களுடன் காத்திருந்த பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட விசுவாசிகள் மத்தியில் ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் வந்த திருத்தந்தை, ஆயர்களுடன் சேர்ந்து, தவக்கால முதல் வாரத்தின் திங்கள்தின கூட்டுத் திருப்பலியைத் தொடங்கினார். சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என, பலர் இசைக்கருவிகளை இனிமையாக மீட்டியது, பக்தியைத் தூண்டுவதாக இருந்தது. இத்திருப்பலியில் கலந்துகொள்வதற்காக, பல மணி நேரங்கள் பயணம் செய்து இரவு முழுவதுமே அத்திடலில் பலர் படுத்திருந்தனர்.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது மற்றும் ஆன்மாவுக்கு ஆறுதல் அளிப்பது என்று பொருள்படும் Li smantal Kajvaltike toj lek என்று அம்மக்களின் மொழியில் மறையுரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். பழங்குடி இன மக்களின் கலாச்சாரத்தைப் புகழ்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், அம்மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் மறையுரையில் குரல் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

San Cristóbal de las Casas நகரில் திருத்தந்தை நிறைவேற்றிய இத்திருப்பலியில், ஷியாப்பாஸ் மாநிலத்தில் வாழும் 13 பழங்குடி இன மக்களின் பிரதிநிதிகள் பங்கெடுத்தது, இத்திருவழிபாட்டை மேலும் சிறப்புறச் செய்தது. San Cristóbal பேராலயத்தின் முன்புறம் போன்று, இத்திருப்பலி மேடையின் பின்புறம், பெரிய பெரிய வண்ண மலர்களாலும், சிங்கம், புலி, கரடி, கோழி போன்ற விலங்கினங்களின் உருவங்களாலும் வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது இம்மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வதை உணர்த்தியது. திருப்பலியின் தொடக்கத்தில், திருத்தந்தையின் ஆசிரோடு, முதலில் ஒரு தியாக்கோன், தூபக் கலசத்தில் நறுமணத்தை நிரப்பி அவ்விடத்தில் தூபமிட்டார். அதேபோல், இரு பெண்கள் இரு பாத்திரங்களில் சூடாக்கப்பட்ட கரியில், நறுமணத்தை நிரப்பித் தூபமிட்டனர். திருப்பலியின் வாசகங்கள் உள்ளூர் மொழிகளில் வாசிக்கப்பட்டன. திருத்தந்தையின் இஸ்பானிய மொழி மறையுரை, இரு உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. பழங்குடி மக்கள் சந்திக்கும் அனைத்து வன்முறைகள், அடக்குமுறைகள் மற்றும் ஒதுக்கப்படும் நிலைகளை நினைவுகூர்ந்து தனது மொழியில் ஒரு பழங்குடி அருள்பணியாளர் சிறப்பு செபம் ஒன்றையும் வாசித்தார். திருப்பலியின் இறுதியிலும், இடையிலும், மக்கள் கூட்டம், திருத்தந்தை பிரான்சிஸ், மக்கள் திருத்தந்தை, அமைதி, போராட்டம், நீதி, பழங்குடியினர் திருத்தந்தை, மாயா இன மக்கள் திருத்தந்தை, தாய்ப் பூமியை மதிப்பவர், என்று தொடர்நது சொல்லிக்கொண்டே இருந்தனர்.

இத்திருப்பலியின் இறுதியில் அருள்பணியாளர்கள் குழு ஒன்று, உள்ளூர் மொழி விவிலிய ஒன்றை, திருத்தந்தையிடம் கொடுத்தனர். இரு ஆண்கள், இரு பெண்கள் தங்கள் தங்கள் மொழிகளில் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர். அவற்றை ஓர் ஆயர் இஸ்பானியத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார். இந்நிகழ்வின் போது, விசுவாசிகள் கூட்டம், ஏழைகளின் திருத்தந்தை பிரான்சிஸ் என்று சப்தமாக, ஒரே குரலில்  சொல்லிக்கொண்டே இருந்தது. திருப்பலி முடிந்து கேட்ட இனிமையான பழங்குடி இசைக் கருவிகளின் இசை ஷியாப்பாஸ் மாநிலமெங்கும் காற்றில் பறந்து மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது என்றுதான் சொல்ல வேண்டும். விசுவாசிகளும் இன்னிசைக்கேற்ப உடல்களை அசைத்துக் கொண்டிருந்தனர். இத்திருப்பலியில், பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை திருத்தந்தை பாராட்டியதன் அடையாளமாக, Aztec இனத்தவரின் Nahuatl மொழியில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்கிய விதிமுறையையும் அவர் வழங்கினார். இத்திருப்பலியில், Tzeltal, Tzotzil, Chol ஆகிய மொழிகளிலும் செபங்கள் இடம்பெற்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மக்கள் பல நேரங்களில் ``Tatik'' என்றே சொன்னார்கள். ``Tatik'' என்றால், Tzotzil மொழியில் ``தந்தை'' என்று அர்த்தம். இத்திருப்பலிக்குப் பின்னர், திறந்த காரில் நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று சான் கிறிஸ்டோபல் ஆயர் இல்லம் சென்று, பல்வேறு பழங்குடி இனங்களைச் சேர்ந்த எட்டுப் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். மெக்சிகோ மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் பழங்குடி இனத்தவர். மக்கள் பார்ப்பதற்கு வசதியாக, இத்திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தை, நீண்ட தூரம் திறந்த காரிலே செல்கிறார். இதனால் திருத்தந்தை செல்லுவிடமெல்லாம் மக்கள் வெள்ளத்தைப் பார்க்க முடிகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.