2016-02-16 14:39:00

இது இரக்கத்தின் காலம்:எல்லா உயிர்களுக்கும் இன்பம்தர வல்லது


ஒரு சமயம் அரசர் ஒருவர், எல்லாருக்கும் வேறுபாடு இல்லாமல் இன்பம் தரக்கூடிய பொருள் எது என்று அறிய விரும்பினார். அதனால் நாட்டு மக்களுக்கு ஓர் அறிக்கை வெளியிட்டார். மக்களே, உலகில் இன்பம் தரக்கூடியது எது என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ, அதைக் கொண்டுவந்து அரண்மனை கண்காட்சியகத்தில் வைக்கலாம், எல்லாருக்கும் இன்பம் தரக்கூடியதை வைக்கும் நபருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். மக்களும், பரிசைத் தட்டிச்செல்வதற்காக, துரிதமாகச் செயல்பட்டு பொருள்களைக் கொண்டு வந்து வைத்தனர். அரசரும், கண்காட்சியகத்திற்கு வந்து ஒவ்வொன்றாகப்  பார்வையிட்டார். முதலில், இனிமையாகப் பாடக்கூடிய ஒரு குயில் இருந்தது. அதைப் பார்த்த அரசர், இந்தக் குயிலின் இன்னிசை எல்லாருக்கும் இன்பம் தரக்கூடியதுதான். ஆனால் இந்த இன்னிசை, காது கேளாதவர்களுக்கு எப்படி இன்பம் தரும் என்று சிந்தித்தார். அடுத்து, ஓர் அழகான மயில், தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. இந்த மயிலின் ஆட்டம் மனதுக்கு இன்பம் தரக்கூடியதுதான். ஆனால் இந்த ஆட்டத்தை, பார்வையிழந்தவர்கள் எப்படி இரசிக்க முடியும் என்று நினைத்து ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக் கொண்டே சென்றார். பலவகையான இனிப்புகள் இருந்தன. இவை வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியில்லை என்று நினைத்தார் அரசர். கடைசியாக, பசியால் வாடியிருக்கும் ஒருவருக்கு, ஒரு பெண், இனிமையாகப் பாடிக்கொண்டே சோறு ஊட்டுவதாக ஒரு களிமண் பொம்மை இருந்தது. அதற்குக் கீழே, அன்பு என்றும் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அரசர், அன்பு ஒன்றுதான், செவிப்புலனற்றவர், பார்வையிழந்தவர், குழந்தைகள், வயதானவர், நோயாளிகள் என, எல்லாருக்கும் இன்பம் அளிக்கக் கூடியது என்று உணர்ந்தார். அந்தப் பொம்மையைச் செய்த கலைஞரை அழைத்து, ஆயிரம் பொற்காசுகளைப் பரிசாகக் கொடுத்தார்.

ஆம். இந்த உலகில் எல்லாருக்கும் மகிழ்வு தரக்கூடியது அன்பு ஒன்றே. இது இரக்கத்தின் காலம். தன்னலமற்று, அன்புகூர்ந்து வாழ்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.