2016-02-15 15:09:00

மெக்சிகோ-எக்காத்தெபெக் நகர் பற்றி ஒரு முன்னுரை


பிப்.15,2016. வட அமெரிக்க நாடாகிய மெக்சிக்கோவில், பிப்ரவரி 15, இத்திங்கள், உள்ளூர் நேரம் காலை ஏழு மணிக்கு, அதாவது இந்திய நேரம் இத்திங்கள் இரவு 6.30 மணிக்கு, தனது நான்காவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது நாளாகிய இஞ்ஞாயிறன்று இரு நிகழ்வுகளை நடத்தினார். முதல் நிகழ்வு, எக்காத்தெபெக் கல்வி மைய வளாகத்தில் திருப்பலி. இரண்டாவது நிகழ்வு மெக்சிகோ நகர் சிறார் மருத்துவமனை சந்திப்பு. இஞ்ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு, மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்திலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில், மார்த்தே இராணுவ விமானத்தளம் சென்றார் திருத்தந்தை. அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரம் ஹெலிகாப்டரில், எக்காத்தெபெக்(Ecatepec) நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது திருத்தந்தை பயணம் செய்த ஹெலிகாப்டர், Teotihuacan பிரமிடுகளுக்கு மேற்பரப்பில் பறந்தது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார். Teotihuacan பிரமிடுகள் ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டவை. ஆனால், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் Aztec இனத்தவர் அங்கு ஆட்சிசெய்தபோது, அவை கவனிப்பாரின்றி விடப்பட்டன.    

மெக்சிகோ நகருக்கு வடகிழக்கே, புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள எக்காத்தெபெக் நகரின் முழுப்பெயர் ‘Ecatepec de Morelos’. Aztec இனப் பேரரசு காலத்தில்,1877ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, புனித கிறிஸ்டோபல் எக்காத்தெபெக் அவர்கள், இதனை ஒரு கிராமமாக அறிவித்து, de Morelos என்ற பெயரையும் இணைத்தார். இந்நகருக்கு, நிலவின் கடவுள் என்று பொருள்படும் ‘Quetzalcoatl’ என்ற பெயரும் உண்டு. பெருங்காற்று குன்று என்றும் இதற்குப் பெயர். இது இன்றும் பெருங்காற்று வீசும் பகுதியாக இருந்தாலும், Aztec பேரரசு காலத்தின் புகழ் இப்போது இல்லை. தற்போது, சட்ட ஒழுங்குகள் இல்லாத, குற்றங்களும், ஏழ்மையும் மலிந்து, சுற்றுச்சூழல் மாசடைந்த பகுதியாக இது உள்ளது. இங்கு வாழும் மக்களில் பலர் அச்சத்துடனே வாழ்கின்றனர். இக்குன்றின் அடிவாரத்தில் ஒருகாலத்தில், நன்னீரையும், உப்பு நீரையும் பிரித்தெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த கால்வாய் தற்போது மனித உடல்கள் குவிந்துள்ள இடமாகவும் மாறியுள்ளது. 2014ம் ஆண்டில் மட்டும், இங்கிருந்து நூற்றுக்கணக்கான மனித எலும்புகளும், ஐந்து ஆண்கள் மற்றும் 16 பெண்களின் சடலங்களும் எடுக்கப்பட்டன. இப்பகுதியில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு அல்லது கட்டாயப் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்கு இணங்காதவர்கள் அமிலம் ஊற்றப்பட்டு, உருக்குலைக்கப்படுகின்றனர் மற்றும் காணாமல்போனவர்களின் பட்டியலிலும் இணைக்கப்படுகின்றனர். 2005ம் ஆண்டிலிருந்து குறைந்தது 1,554 பெண்கள் காணாமல்போயுள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. நேயர்களே, அப்பாவி மக்கள் துன்புறும் இத்தகைய இடங்களுக்கே, குறிப்பாக, இந்த இறைஇரக்கத்தின் யூபிலி ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்ல விரும்புகிறார் என்பது இஞ்ஞாயிறன்று மிகவும் தெளிவானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.