2016-02-15 13:04:00

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை


பிப்.15,2016. என் அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே,

இந்த ஞாயிறு வழங்கப்பட்ட முதல் வாசகத்தில், மோசே தன் மக்களுக்கு வாழும் முறை ஒன்றை வழங்குகிறார். அறுவடை நேரத்தில், முதல் பலனை காணிக்கையாக்கும் வேளையில், தங்கள் ஆரம்பங்களை, தாங்கள் கடந்துவந்த கடினமான பாதையை, இஸ்ரயேல் மக்கள் மறந்துவிடக்கூடாது என்று மோசே கூறுகிறார். (காண்க. இணைச் சட்டம் 26: 5-11)

இன்று நாம் நம் உழைப்பின் முதல் கனிகளை தந்தைக்குப் படைக்கிறோம். வரலாற்றில் இத்தருணத்தை அடைவதற்கு, நாம் எவ்வளவோ துயரங்களைத் தாங்கியுள்ளோம்! மோசே தன் மக்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று, நாமும், நம் வரலாற்றை நினைவில் கொள்வோம். நம் நடுவே இறைவன் நடந்து செல்கிறார் என்ற உறுதியை நாம் அடுத்த தலைமுறைக்கு வழங்குவோம்.

உங்கள் வரலாற்றை நினைவுகூரும் வேளையில், நானும் உங்களோடு இணைகிறேன். "புதிய தலைமுறைகள் தங்கள் உயர்ந்த கனவுகளுக்கு உரு கொடுக்கும்போது, அந்த முயற்சியில் கிறிஸ்தவர்கள் இணையாமல் இருக்கமுடியாது. துன்புறுவோரின் நிலையை உயர்த்துவதில், கிறிஸ்தவர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பர்" என்று திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அவர்கள் மெக்சிகோ மக்களுக்குக் கூறிய சொற்களை உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

மெக்சிகோ நாட்டை தலைசிறந்த நாடாக மாற்ற எடுக்கப்படும் முயற்சிகளில் கிறிஸ்தவர்கள் முன்னணி வகிக்கவேண்டும் என்று இன்று மீண்டும் உங்களை அழைக்கிறேன்.

குவாதலூப்பே அன்னையின் நறுமணத்தால் இந்த நாடு நிரம்பியுள்ளது. "ஒளிமிகுந்த சாட்சிகளாக வாழ அன்னையே எங்களுக்கு உதவுங்கள்" என்று நம் முழு மனதோடு அன்னையிடம் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.