2016-02-15 13:11:00

குழந்தைகள் மருத்துவமனையில் திருத்தந்தையின் வாழ்த்துரை


பிப்.15,2016. உங்கள் அனைவரோடும் சிறிது நேரத்தைச் செலவிட எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

நற்செய்தியில் குழந்தை இயேசுவைக் குறித்து ஒரு பகுதி உள்ளது. இயேசுவின் பெற்றோர், யோசேப்பும், மரியாவும் அவரை எருசலேம் கோவிலுக்கு எடுத்துச் சென்றபோது, சிமியோன் என்ற முதியவர், குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தி இறைவனுக்கு நன்றி சொன்னார்; குழந்தையை ஆசீர்வதித்தார்.

முதியவர் சிமியோன் நமக்கு இரு பாடங்களைச் சொல்லித் தருகிறார்: நன்றி, ஆசீர்வாதம் என்ற இரு பாடங்கள்.

நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன், உங்கள் மருத்துவர்களும், தாதியரும் உங்களைப் பேணும்போதெல்லாம் உங்களை ஆசீர்வதிக்கின்றனர். நீங்களும் அவர்களை ஆசீர்வதியுங்கள், அவர்களுக்காக இயேசுவிடம் செபியுங்கள்.

மிகுந்த கவனத்துடன் உங்களைப் பேணிக் காத்துவரும் அனைவருக்காகவும் நான் நன்றி சொல்கிறேன். அதேநேரம், உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன். உங்களையும், உங்கள் குடும்பங்களையும், இங்கு பணியாற்றும் அனைவரின் குடும்பங்களையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!

நீங்கள் விரைவில் நலம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உங்களுக்கு 'அன்பு மருத்துவம்' அளிக்கும் அனைவருக்காகவும் நான் செபிக்கிறேன்.

"உன் இதயம் கலக்கம் அடையவேண்டாம், நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன்" என்று புனித ஹுவான் தியேகோவுக்கு, குவாதலூப்பே அன்னை மரியா சொன்னதைப் போல, நம்மிடமும் சொல்கிறார். அன்னை மரியா உங்களை அரவணைத்துக் காப்பாராக! எனக்காக வேண்ட மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.