2016-02-15 15:16:00

எக்காத்தெபெக் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.15,2016. எக்காத்தெபெக் நகருக்கு இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10.45 மணிக்கு, அதாவது இந்திய நேரம் இரவு 10.15 மணிக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அந்நகர் ஆயர் ஆஸ்கார் ரொபெர்த்தோ மற்றும் நகராட்சி அதிகாரிகள் வரவேற்றனர். நகராட்சித் தலைவர், திருத்தந்தைக்கு நகரத்தின் சாவியை அளித்தார். பின்னர் திருத்தந்தை திறந்த காரில், அந்நகர் கல்வி மைய வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய நான்கு இலட்சம் விசுவாசிகள் மத்தியில் வலம் வந்த பின்னர், ஆயர்களுடன் சேர்ந்து, தவக்கால முதல் ஞாயிறு திருப்பலியைத் தொடங்கினார். இப்பயணத்தில் முதல் இரு நாள்களில், பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தையைப் பார்த்துள்ளனர் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளார். மெக்சிகோவில் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகக் கூறப்படும் எக்காத்தெபெக் நகர் கல்வி மைய வளாகத்தில் திருப்பலியில் கலந்துகொண்ட விசுவாசிகளுக்கு மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலம், மனம் மாற்றத்திற்கான சிறப்பான காலம், ஒவ்வொரு கிறிஸ்தவரும், செல்வம், தற்பெருமை, இறுமாப்பு ஆகிய மூன்று சோதனைகளை எதிர்கொள்ள  வேண்டியிருக்கிறது. நாம் இயேசுவைத் தேர்ந்தெடுத்துள்ளோம், சாத்தானை அல்ல, சாத்தானோடு உரையாடல் நடத்தாதீர்கள், இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், நம்மைச் கிழித்தெடுக்கும் அனைத்தினின்றும் நம் இதயங்களைக் குணப்படுத்த இயேசு விரும்புகிறார் என்று கூறினார் திருத்தந்தை. இம்மறையுரைக்கு இடையில், இயேசுவே, நீரே எம் மீட்பர் என்று, மூன்று முறை சப்தமாகச் சொல்லுமாறு விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. விசுவாசிகளும் அவ்வாறே உரக்கச் சொன்னார்கள். திருப்பலிப்பீடம் தவக்காலத்தைக் குறிப்பதாக, எளிமையாக, அதேநேரம் மிக அழகாக, Aztec கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாய் இருந்தது. திருப்பலிப்பீட மேற்கூரை, வெண்மை நிறத்தில், அரைவட்ட வடிவில் இருந்தது. திருப்பலிப்பீட மேடையில் குவாதலூப்பே அன்னை மரியா திருவுருவப் படம், வெள்ளை ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருப்பலிக்கு முன்னர் திருத்தந்தை இப்படத்திற்கு, நறுமணத் தூபமிடும்போது, அப்படம் கதிரவன் ஒளிக்கதிர்களால் மின்னியது.

இத்திருப்பலிக்குப் பின்னர், ஞாயிறு மூவேளை செப உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் ஆசிர்வாதங்களை நினைவில்கொண்டு, அவற்றுக்கு நன்றியுள்ளவர்களாக வாழுமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.