2016-02-15 12:55:00

Ecatepec கல்வி மையத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


பிப்.15,2016. அன்பு, சகோதர, சகோதரிகளே, கடந்த புதனன்று நாம் தவக்காலத்தைத் துவக்கினோம். தந்தையின் அன்புக்கு உரிய குழந்தைகள் நாம் என்பதை உணர்வதற்கு, தவக்காலம் தகுந்ததொரு தருணம். சோர்வு, வாழ்வில் பிடிப்பற்ற மனநிலை, நம்பிக்கையின்மை என்ற ஆடைகளை நாம் உடுத்தி வரும்போது, அவற்றைக் களைந்துவிட்டு, மாண்பு என்ற ஆடையை, கனிவோடும், பாசத்தோடும் உடுத்துபவர், நம் தந்தை.

ஒரு பெரிய குடும்பத்தின் தந்தையாக இருப்பவர் நம் தந்தை. அவர், 'என் தந்தை'யோ, 'உன் வளர்ப்புத் தந்தை'யோ அல்ல, மாறாக, அவர், 'நம் தந்தை'. நம் அனைவருக்கும் தந்தை என்று இறைவன் கொண்டுள்ள கனவை, நாம் ஒவ்வொரு உயிர்ப்பு விழாவிலும், ஒவ்வொரு திருப்பலியிலும் கொண்டாடுகிறோம். இந்தக் கனவிற்காக, முற்காலத்திலும், இக்காலத்திலும் எத்தனையோ பேர் தங்கள் இரத்தத்தைச் சிந்தி, சாட்சி பகர்ந்துள்ளனர்.

பொய்மையின் பிறப்பிடமான சாத்தான், இந்தக் கனவை நம் வாழ்வில் அனுபவிக்க விடாமல் தடுக்கிறான். இக்குடும்பத்தைப் பிரிக்க முயல்கிறான். ஒவ்வொருவரிலும் உள்ள மாண்பினை அறிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், நாம் எத்தனைமுறை நம் குடும்பங்களை, சமுதாயங்களைக் காயப்படுத்தியுள்ளோம்; வேதனை அடைந்துள்ளோம்.

தவக்காலம் மனமாற்றத்தின் காலம்; நம் உணர்வுகளை மறு பரிசீலனை செய்யும் காலம். கடவுளின்  திட்டத்திற்கும், கனவுக்கும் எதிராக இருக்கும் அநீதிகளைக் காண்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு காலம்.

கிறிஸ்து சந்தித்த மூன்று சோதனைகள் உள்ளன.  கிறிஸ்தவர்கள் சந்திக்கும் மூன்று சோதனைகள் நம் உள்ளங்களை செல்லரிக்கச் செய்து, நம்மைக் கிழித்துவிடுகின்றன.

முதல் சோதனை, செல்வம்: அனைவரையும் சென்றடையவேண்டிய செல்வத்தை 'என் மக்களுக்கு மட்டும்' என்று பயன்படுத்துவது. மற்றவர் உழைப்பில் உருவான அப்பத்தை எடுத்து, தன் குழந்தைகளுக்கு மட்டும் வழங்குவது, முதல் சோதனை.

இரண்டாவது சோதனை, தற்பெருமை: தன்னைப்போல் இல்லாத மற்றவரை ஒதுக்கிவிட்டு, தன் பெருமையைத் தேடிச் செல்லுதல்.

மூன்றாவது சோதனை, இறுமாப்பு: தனக்குரிய உண்மை நிலையைவிட, இன்னும் அதிகமாக தன்னை உயர்த்திக் கொள்ளுதல். "'கடவுளே, நான் மற்ற மக்களைப் போல இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்" என்று சொன்ன பரிசேயரைப் போன்ற இறுமாப்பு.

இத்தகையச் சோதனைகள் எனக்குள் எந்த அளவுக்கு உள்ளன? இவ்வுலகச் செல்வங்களே நம் வாழ்வின் ஊற்று என்று சொல்வதற்கு நாம் எவ்வளவு பழகிவிட்டோம்? பிறரின் மாண்பையும், நற்பெயரையும் நிலைநாட்ட உழைப்பதே உண்மையான நம்பிக்கை, மகிழ்வு என்பதை எந்த அளவுக்கு நான் உணர்கிறேன்? என்ற கேள்விகளை எழுப்புவது நல்லது.

செல்வம், புகழ், அதிகாரம் என்பவை நம்மை எவ்வளவு தூரம் ஈர்க்கின்றன என்பதை அறிவோம். இதற்காகவே, திருஅவை, தவக்காலத்தை நமக்கு வழங்கி, நம் மனமாற்றத்தை விழைகிறது. 

இறைவனின் பெயர் இரக்கம் என்பதை, இந்த திருப்பலியின் வழியே நாம் அனைவரும் உணர்வதற்கு தூய ஆவியார் நம்மை புத்துயிர் பெறச் செய்வாராக!

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.