2016-02-14 13:54:00

விண்ணேற்பு பேராலயத்தில் மெக்சிகோ ஆயர்கள் சந்திப்பு


பிப்.14,2016. மெக்சிகோ நகர் விண்ணேற்பு அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நுழைந்தபோது, கிறிஸ்து வெல்கிறார் என்று பொருள்படும் இலத்தீன் பாடல் பாடப்பட்டது. பழமைமிக்க, மிக அழகான அப்பேராலயத்தில், மன்னிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பீடத்தில் திருநற்கருணை முன்பாக சிறிது நேரம் செபித்த பின்னர், பேராலயத்தில் கூடியிருந்த  மெக்சிகோவின் 90 ஆயர்களுக்கு இஸ்பானியத்தில் நீண்ட உரை ஒன்றும் நிகழ்த்தினார். ‘la Morenita,’ என்று பாசமாக அழைக்கப்படும் குவாதலூப்பே அன்னை மரியா பூமிக்கு, இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நான் எவ்வாறு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளாமல் இருக்க இயலும், கடவுளின் கனிவே, மனிதரின் இதயங்களில் இடம்பிடிப்பதற்கு வல்லமைமிக்கது என்பதை அன்னைமரியா நமக்குக் கற்பிக்கிறார் என்று ஆயர்களிடம் கூறினார்.   மெக்சிகோ மக்களில் காணப்படும் மரணப் புனிதர் பக்தியையும் குறை கூறினார் திருத்தந்தை. குடிபெயர்வோர் மற்றும் பூர்வீக மக்களின் நலன்களைக் காக்குமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை.

இவ்வுரைய முடித்து, பீடப்பரிசாரகர் சிறார் குழுவை ஆசிர்வதித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் அனைத்து ஆயர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். 1530ம் ஆண்டில் திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களால் பேராலயமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்திலிருந்து மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்துக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.