2016-02-13 15:32:00

மெக்சிகோ நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.13,2016. ஹவானாவிலிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து, மெக்சிகோ நாட்டுத் தலைநகர், மெக்சிகோ நகர் பெனித்தோ ஹூவாரெஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் திருத்தந்தை சென்றிறங்கிய போது உள்ளூர் நேரம் இவ்வெள்ளி இரவு 7.30 மணியாகும். அப்போது இந்திய நேரம் இச்சனிக்கிழமை காலை 7 மணியாகும். விமான நிலையத்தில், மெக்சிகோ அரசுத்தலைவர் Enrique Pena Nieto, அவரின் மனைவியுடன்  திருத்தந்தையை வரவேற்று சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தனர். Mariachi என்ற மெக்சிகோ பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. பல வகையான பாரம்பரிய இசைக்கருவிகளுடன், அந்நாட்டு மரபுத் தொப்பிகளை ஆண்கள் அணிந்துகொண்டும், பெண்கள் சிவப்புநிற ஆடைகளுடனும்  நடனமாடி வரவேற்றனர். 2011ம் ஆண்டில் யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரியத்தில் Mariachi இசை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திலிருந்து மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்திற்கு 19 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்றார் திருத்தந்தை. வழியெங்கும், மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், மஞ்சள் கொடிகளை ஆட்டிக்கொண்டு நின்று மின்னும் ஒளிவிளக்குகளில் திருத்தந்தையைக் கண்டு மகிழ்ந்தனர். இதோ திருத்தந்தை செல்கிறார், திருத்தந்தையே, இந்த உலகம் முழுவதும் உம்மை அன்பு கூர்கின்றது என்று மக்கள் பாடிக்கொண்டு நின்றனர். இலத்தீன் அமெரிக்காவில் அதிகமான கத்தோலிக்கரைக் கொண்டுள்ள நாடு மெக்சிகோ என்பது இம்மக்களின் ஆரவாரத்தைக்கொண்டே அறிந்து கொள்ளலாம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத் தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் செல்வதற்கு முன்னர், அந்த இடத்திற்கு முன்பாகக் கூடியிருந்த மக்களிடம், இந்த வார நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு உங்களுக்கு ஓய்வு தேவை என்று சொல்லி, அங்கிருந்த மக்கள் கொடுத்த இரண்டு வெள்ளை ரோஜாக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் அம்மக்களுடன் சேர்ந்து அருள் நிறைந்த மரியே என்ற செபத்தைச் சொன்னார். பின்னர் அவர்களிடம், அன்னை மரியாவைப் பார்த்து, நம்மை அன்பு கூர்பவர்கள், நாம் அன்பு கூர்பவர்கள், நமக்குப் பிடிக்காதவர்கள், நம்மைப் பிடிக்காதவர்கள், நம்மீது பொறாமைப்படுபவர்கள் ஆகியோரின் முகங்களை நினைவுகூருங்கள் என்று கூறினார். பின்னர் அம்மக்கள் கூட்டத்திடமிருந்து விடைபெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 12வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. இந்நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்களும் சந்தித்து, ஆரத்தழுவி, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்தது, வரலாற்றில் மாபெரும் நிகழ்வாக என்றுமே போற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.